புதுச்சேரி: புதுச்சேரியில் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் சனிக்கிழமை மூடப்படும் என்று ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களை நேரில் சென்று ஆட்சியர் குலோத்துங்கன் பார்வையிட்டதுடன், புதுச்சேரி பேரிடர் மேலாண்மை அவசர கால செயல் மையத்திலும் நேரில் சென்று இந்த சூழ்நிலையை எதிர்கொண்டிட மிக துரிதமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். தற்போது உள்ள நிலைமை குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த புயல் நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக ஆட்சியர் குலோத்துங்கன் கூறுகையில், “அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு காரணங்களுக்கு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் அனைத்தும் சனிக்கிழமை மூடப்படும்.
புயல் தொடர்பான புகார்களுக்கு இலவச உதவி எண்களான 112, 1077 மற்றும் வாட்ஸாப் எண்ணான 9488981070 ஆகியவற்றை பயன் படுத்திக்கொள்ளலாம். மின் கம்பங்கள், மின்மாற்றி (transformer) தூண்கள் மற்றும் அறுந்து கிடைக்கும் மின் கம்பிகளை தொடக்கூடாது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்போர் உடனடியாக பாதுகாப்பு கருதி நிவாரண முகாம்களில் வந்து தங்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.
களத்தில் இறங்கிய தேசிய பேரிடர் மீட்பு படை: தேசிய பேரிடர் மீட்பு படையினர் பேரிடர் பாதிப்பு நிகழ்ந்தால் மின்சாரம் இல்லாத மற்றும் தெருவிளக்கு இல்லாத இடங்களில் வெளிச்சம் உருவாக்கும் பெட்ரோலில் இயங்கும் விளக்கினை இயக்கும் விதம் குறித்து பேரிடர் அவசர கால செயல் மையத்தின் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். பின்னர், சோலை நகர் மீனவர் கிராமத்தில் பேரிடர் காலத்தில் பாதுகாப்பாக இருப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
புதுச்சேரியில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் வில்லியனுர் ஆரியபாளையம் பகுதியினை நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், வெள்ளம் மற்றும் புயல் நேரங்களில் பாதுகாப்பாக இருப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.