சினிமா ரசிகர்கள் படம் பார்ப்பது சரிதான். ஆனால், அதற்காக “அஜித் வாழ்க, விஜய் வாழ்க…” என்று சண்டை போடுவது சரியானதல்ல என்று அறிவுரை வழங்கியுள்ளார் நடிகர் அஜித் குமார்.
துபையில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்று 3-ஆவது இடம்பிடித்து சாதித்துக் காட்டியுள்ள அஜித் குமாரின் அணியையும் அவரையும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு மழையில் நனைய வைத்துவிட்டனர்.
இந்த நிலையில், கார் பந்தயத்துக்குப்பின் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், “அஜித் வாழ்க, விஜய் வாழ்க… சரி, நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள். முதலில் உங்களுடைய வாழ்க்கையை பாருங்கள்..” என்று ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும், ஆத்ம திருப்திக்காக தான் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இது தனக்கு இனிமையான அனுபவத்தை தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : துபாய் கார் ரேசிங்கில் தொடரில் 3ஆவது இடம் பிடித்து அசத்திய அஜித் குமார் அணி!
சாலைகளில் தாறுமாறாக வாகனங்களை இயக்கி இளைஞர்கள் பலர் விபத்துகளில் சிக்குவதை தான் பார்ப்பதாகவும், அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் பிறரது வாழ்க்கையையும் அபாயத்தில் தள்ளுவதகவும் குறிப்பிட்டுள்ள அஜித், இதனை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல, சமூக ஊடகங்கள் விஷமாக மாறியிருப்பதாகக் குறிப்பிட்டு வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.
“உடல் நலனைப் போன்றே மன நலனும் முக்கியமானதே. சமூக ஊடகங்களில் பரவியிருகும் விஷமானது, பிரபலங்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு நபரையும் பாதிக்கிறது.
நம் பேரக்குழந்தைகள்கூட நம்மை நினைவில் வைத்திருப்பார்களா என்பது தெரியாததொன்றாக இருக்கும்போது, எதற்காக வெறுப்பைப் பரப்புகிறீர்கள்..? பிறருக்காகவும் சந்தோஷப்படுங்கள்!
உங்கள் வாழ்க்கை மீது கவனத்தைச் செலுத்துங்கள். அதன்மூலம் இந்த உலகத்தை மேம்பட்டதொரு வசிப்பிடமாக மாற்ற பங்களியுங்கள்”.
சமூக வலைதளங்களில் இப்போது அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த காணொலி பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பையும் அவர்களது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இப்படி, நல்ல விஷயத்தை அஜித் சொன்னதால், நிச்சயம் நிறைய பேர் இதனைக் கேட்டு அதன்படி நடந்து கொள்வார்கள் என்று பலரும் அஜித்தை பாராட்டி பேசி வருகின்றனர்.
அஜித் பேசியிருப்பதாவது, “வெற்றி என்பது காட்டுக்குதிரை போன்றது. அந்த குதிரையை உங்களால் கட்டுப்படுத்தி வளர்க்க முடியவில்லையெனில், உங்களை அது தூக்கியெறிந்துவிடும்.”
“வெவ்வேறு இடங்களுக்கு சென்று வருவதால், இந்த உலகம் எவ்வளவு சிறிதென்பதை அந்த பயணம் கற்றுத்தரும். நாம் எத்தனை சிறியோர் என்பதையும் அது கற்றுத்தரும்.
விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம், வெற்றியையும் தோல்வியையும் எப்படி கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளலாம். உங்களுடைய யதார்த்த குணாதிசயத்தையும் இது பிரதிபலிக்கச் செய்யும்.
உங்களைச் சுற்றி நல்ல மனிதர்களை வைத்துக்கொள்வது முக்கியமான ஒன்று. வெற்றிக்கு தேவை விடா முயற்சி, அதேபோல, உங்கள் குடும்பம் மற்றும் அன்புக்குரியோரின் ஆதரவும் தேவை. எனது மனைவி, குழந்தைகள் மற்றும் உடன்பிறப்புகளின் ஆதரவின்றி நான் இதைச் செய்திருக்க முடியாது.”
இறுதியாக, அவர் சொன்ன விஷயம் கருத்திற்கொள்ள வேண்டியது. “இந்த தருணத்தை அனுபவித்து வாழுங்கள். கடந்த காலத்தை ரொம்பவும் நம்பியிருக்காதீர்கள். எதிர்காலத்தைப் பற்றி ரொம்பவும் கவலைப்படாதீர்கள்.
கடுமையாக உழைக்கவும், ஆரோக்கியமாக வாழவும் (உடல் ரீதியாகவும் | மன ரிதியாகவும்), பிறரிடம் அன்பாக இருங்கள்.
என்னுடைய ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்கிறார்கள் என்பதையும், அன்புடன் இருக்கிறார்கள் என்பதையும் அறியும்போது நான் மிகுந்த சந்தோஷமடைவேன்.
வாழ்க்கை கொஞ்ச காலம் மட்டும்தான், ஆகவே அதை அர்த்தமுள்ளதாக்குங்கள்!” என்றார் அஜித் குமார்.