ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சந்தித்து பேசவிருக்கிறார்.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. எனினும் முதல்வர் அலுவலகத்துக்குச் செல்லக் கூடாது, எந்த கோப்புகளிலும் கையெழுத்திடக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, சிறையில் இருந்து வெளியே வந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.
இதனால் தில்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழும்பியுள்ளது.
அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்தால்.. அடுத்த முதல்வர் யார்?
இந்த சூழ்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தில் அவரை சந்தித்துப் பேசுகிறார்.
அடுத்த முதல்வர் குறித்து இருவரும் ஆலோசிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து இன்று மாலை ஆம் ஆத்மி நாடாளுமன்றக் குழு, கேஜரிவாலை சந்தித்துப் பேசுகிறது.
இன்னும் இரு தினங்களில் கேஜரிவால் ராஜிநாமா செய்வார், இந்த வார இறுதிக்குள் அடுத்த முதல்வர் பொறுப்பேற்பார் என்று கட்சியினர் கூறி வருகின்றனர்.
அடுத்த முதல்வர் பதவிக்கு சுனிதா கேஜரிவால், அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. எனினும் ஓரிரு தினங்களில் தில்லியின் அடுத்த முதல்வர் யார் என்று தெரிய வரும்.