சென்னை: அக். 16ஆம் தேதி வட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இதில் எந்த அபாயமும் இல்லை, இது இயற்கை நிகழ்வு என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ரெட் அலர்ட், அதிகனமழை என்றால், ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் அதிகனமழை பெய்துவிடாது என்றும், ஓரிரு இடங்களில்தான் அதிகனமழை பெய்யும், அவ்வாறு பெய்தாலும் கனமழை என்பது பகுதிக்கு பகுதி மாறுபடும். எனவே, சென்னை என்றால் ஒட்டுமொத்த சென்னை என நினைத்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் அடுத்தடுத்து ஒரு சில நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் ரெட் அலர்ட் தகவல்களால் அதிகம் அலர்ட் ஆகி, சற்று அச்சத்தில் இருக்கும் நிலையில், ஆறுதல் அளிக்கும் வகையில், பேசியருக்கிறார் பாலச்சந்திரன்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இன்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படிக்க.. 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
அப்போது, அவரிடம் அபாயகரமான சூழல் இருக்கிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எந்த அபாயமான சூழல் நிலவுகிறது என்று கேள்வி எழுப்பியதோடு, இது இயற்கையான நிகழ்வு, வழக்கமான மழைக்காலம் போலவே இதுவும் இருக்கும், எப்போதும் மழைக் காலத்தை எப்படி எதிர்கொள்வோமோ அப்படியே எதிர்கொள்வோம், அப்படியே எதிர்பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அதி கனமழை என்றால், எல்லா பகுதிகளிலும் அப்படி இருக்காது, அப்படியே மழை பெய்தாலும், அந்தப் அந்தப் பகுதிக்கு ஏற்பதான் அது மாறும்.
அதுபோலத்தான் அக். 16ஆம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து இடங்களிலும் 22 செ.மீ. மழை பெய்யும் என்று சொல்லிவிட முடியாது. பரவலாக மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்றார்.
மூன்று நாள்களும் சேர்த்து 40 செ.மீ. மழை பெய்யுமா? என கேட்டதற்கு, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் மூன்று நாள்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 40 செ.மீ. மழை பதிவாகும் என்று சேர்த்து சொல்வதில்லை.
அதுபோல ஓரிடத்தில் 6 செ.மீ,. மழை பெய்தால் மிதமான மழை, 7 முதல் 11 செ.மீ. வரை பெய்தால் கனமழை என்றும், 12 முதல் 19 செ.மீ. மழை பெய்தால் மிகக்கனமழை என்றும், 20 செ.மீ.க்கும் மேல் மழை பெய்தால் அதிகனமழை என்றும் குறிப்பிடுவோம்.
ஒரு ஒரு பகுதிக்கும் கனமழை என்பது மாறுபடும். நேற்று நுங்கம்பாக்கத்தில் 7 மி.மீ. மழையும், கோடம்பாக்கம் பகுதியில் 50 மி.மீ. மழையும் பெய்துள்ளது. எனவே சராசரியாகத்தான் சொல்ல முடியும். கனமழையும் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்று அர்த்தமல்ல, ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதுதான் தகவல் என்றார்.
மற்றொரு கேள்விக்கு, சென்னைக்கு இன்று படிப்படியாக மழை அதிகரிக்கும் என்று சொன்னால், இத்தனை மணிக்கு என்று சொல்லமுடியாது. பரவலாக மாலை முதல் அதிகரிக்கத் தொடங்கும். இப்போதே சென்னையில் சில இடங்களில் மழை பெய்துகொண்டுதானிருக்கிறது என்று பாலச்சந்திரன் பதிலளித்துள்ளார்.