அதிமுகவில் அனைத்து மாவட்ட செயலர்களும் நன்றாகவே பணிபுரிகிறார்கள் என்று கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் ஜெயலலிதா கடந்த 2014இல் அளித்த ரூ.4.5 கோடி மதிப்பிலான 13.5 கிலோ எடையுள்ள தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கடந்த அக்.30 தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு அணிவிப்பதற்காக, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் வங்கிக்கு நேரில் சென்று கையெழுத்திட்டு கடந்த அக்.25ஆம் தேதி தங்க கவசத்தை பெற்றுச் சென்றனர்.
இந்நிலையில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்று முடிந்த நிலையில் மீண்டும் அதனை மதுரை அண்ணா நகர் வங்கியில் இன்று ஒப்படைத்தனர். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் உடன் இருந்தனர்.