“அனைத்துப் பள்ளிகளிலும் உளவியல் ஆலோசனை மையம் அமைக்கப்பட வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல் | ”Psychology centers should be set up in all schools” – Annamalai insists

1352151.jpg
Spread the love

சென்னை: தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காக, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை திமுக சிதைப்பதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது போல, உடனடியாக அனைத்துப் பள்ளிகளிலும் உளவியல் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பத்தூர் அரசுப் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவிகள், அந்தப் பள்ளி ஆசிரியரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி இன்று வெளிவந்துள்ளது. தமிழகம் முழுவதுமே கடந்த சில ஆண்டுகளாக, பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவது தொடர்கதை ஆகியிருக்கிறது. ஆனால், பெண் குழந்தைகளுக்கு எதிராக பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

ஒவ்வொரு முறையும், நமது குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளான பின்னர், குற்றவாளிகளைக் கைது செய்து விட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் திமுக அரசு, இந்தக் குற்றங்களைத் தடுப்பதற்கும், பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த அமைப்புக்களையே கலைத்திருக்கிறது என்பதுதான் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம், ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் ஆலோசனை மையம் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது. இதனை அடுத்து, அப்போதைய அதிமுக அரசு, மூன்று மாவட்டங்களுக்கு ஒரு நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்தை அமைத்திருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், இந்த நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் திட்டத்தையே நிறுத்திவிட்டது. இதற்காக ஒதுக்கப்பட்ட அரசு வாகனங்கள், முடக்கப்பட்டு, மூலையில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும், சுமார் ரூ.40,000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்படும் பள்ளிக் கல்வித் துறையில், அரசுப் பள்ளிகளில் மட்டுமே இது போன்ற பாலியல் குற்றங்களும், மாணவ, மாணவியர் எதிர்கொள்ளும் இதர பிரச்சினைகளும் அதிகளவில் நடைபெறுகின்றன என்பதிலேயே, திமுக அரசும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவ, மாணவியரைக் கையாளும் விதம் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் தரமான கல்வி வாய்ப்பையும் மறுத்து, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கும் அமைப்பையும் பலவீனப்படுத்தி, ஒட்டுமொத்தமாக, அரசுப் பள்ளிகளின் செயல்பாட்டையே முடக்குவதுதான் திமுகவின் நோக்கமாக இருக்கிறது. தொடர்ந்து அரசுப் பள்ளிகளில், மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், முதல்வரைப் போலவே விளம்பர மோகத்தில் திரிந்து கொண்டிருக்கிறார். அமைச்சராக நீடிக்க இவருக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?

உடனடியாக அனைத்துப் பள்ளிகளிலும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது போல, உளவியல் மையங்கள் அமைக்கப்பட வேண்டும். பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். நாட்டின் எதிர்காலத் தூண்களான பள்ளி மாணவர்களின் பிரச்சினைகள், தொடக்க நிலையிலேயே கண்டறியப்பட்டு, தீர்வு வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும்படி, பள்ளிகளில் தகுதி பெற்ற உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

அரசுப் பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றாமல், அப்பா, அண்ணன் என்று நாடகமாடிக் கொண்டு, தனியார் பள்ளிகள் வளர்ச்சிக்கு நேரடியாக உதவிக் கொண்டிருக்கும் பகுதி நேரப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தனது பதவியின் பொறுப்பை இனியாவது உணர்வாரா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பால் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் குறையாது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமது குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளைப் போல, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் எங்கள் குழந்தைகளுக்கும், மும்மொழிக் கல்வி கிடைப்பதைத் தடுக்கும் தனது வாதத்தை, பெயிண்ட் டப்பாவைத் தூக்கித் திரியும் சிலரைத் தவிர, ஒட்டு மொத்த தமிழகமுமே நிராகரித்துவிட்டதை அறிந்தவுடன், ​​நாடாளுமன்ற இடங்கள் குறைப்பு என்ற தனது கற்பனையின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

தனது நிலைப்பாட்டில் அவமானகரமான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது திமுக. நாடாளுமன்ற இடங்கள் எல்லை நிர்ணயம் எப்போது நடக்கும், அது நடக்கும்போது எப்படி அது தென் மாநிலங்கள் உட்பட அனைவருக்கும் சாதகமாக இருக்கும் என்று, பிரதமர் நரேந்திர மோடி தெளிவாகக் கூறியிருந்தும், ​​ஏன் இந்த பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் ஸ்டாலின்? கற்பனையான பயங்களும், முட்டாள்தனமான வாதங்களுமே, தமிழக முதல்வரின் ஒரே செயல்பாடாக மாறிவிட்டன” என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *