அரசியலமைப்பு தின கட்டுரை போட்டி: வெற்றிபெற்ற மாணவர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டது | Constitution Day Essay Competition

1341065.jpg
Spread the love

அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகை சார்பாக நடத்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. வரும் ஜன.26-ல் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் குடியரசு தின விழாவில், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு ஆளுநர் பரிசு வழங்குகிறார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நவ.26-ம் தேதி நடைபெறும் அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கான வருடாந்திர மாநில அளவிலான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது.

“இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கம்: முக்கிய நிகழ்வுகளும் தலைவர்களும்”, “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள சமூகநீதிக்கான பாதுகாப்பு அம்சங்கள்” ஆகிய தலைப்புகளில் பள்ளி மாணவர்கள் எழுதினர். இதேபோல் “இந்திய அரசியலமைப்புச் சட்டம் காட்டுகிற அடிப்படைக் கடமைகள்: உரிமைகளையும் பொறுப்புகளையும் சமநிலைப்படுத்துதல்” என்ற தலைப்புகளில் கல்லூரி மாணவர்கள் கட்டுரைகளை எழுதினர்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்பட்ட மாநில அளவிலான இப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் நடுவர்கள் மூலம் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி மற்றும் கல்லூரி பிரிவுகளில் முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் வென்றவர்களுக்கு முறையே ரூ.50,000, ரூ.30,000 ரூ.25,000 ரொக்கப் பரிசுடன் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். சிறப்புப் பரிசு பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். வரும் ஜனவரி 26 -ல் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவின்போது மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுகளை வழங்குவார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *