அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியார் பள்ளிகள் நிதியுதவி? பாஜக, கம்யூ. கண்டனம்

Dinamani2f2025 01 012f3wbjjhe22fne 21 11 2024 Ungal Thedi Ungal Uril 05 2111chn 100 5.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளின் நிதியுதவி மூலம் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுப்பட உள்ளதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் தொடக்க விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக் வெளியான தகவலைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

‘அடுத்த கல்வியாண்டில், 500 அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அவற்றின் அருகிலுள்ள தனியார் பள்ளிகள் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியிருப்பது அதிர்சியளிக்கிறது’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், ‘அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்தி, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தத்துக் கொடுக்க முனைவது, ஏழை மக்களின் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயல்’ என கடுமையான விமர்சனங்களை மாநில அரசின் மீது சுமத்தியுள்ளது அக்கட்சி. இந்த நடவடிக்கையை அரசு கைவிடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல, பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில் கூறியிருப்பதாவது: ‘நேற்றைய தினம் நடைபெற்ற, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றான, 500 அரசுப் பள்ளிகள், அவற்றின் அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளால் மேம்படுத்தப்படும் என்ற தீர்மானத்தை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் வரவேற்றிருக்கிறார்.

500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதியில்லையா என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. தமிழக அரசின் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு மட்டும் ரூ.44,042 கோடி.

இது தவிர, ஒவ்வொரு ஆண்டும், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தனது தேர்தல் வாக்குறுதிகளில், சிதிலமடைந்த 10,000 அரசுப் பள்ளிக் கட்டிடங்களைப் புதிதாகக் கட்டிக் கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

சமீபத்தில், மாவட்டக் கல்வி அலுவலகங்களின் இணைய இணைப்புக் கட்டணமான ரூ.1.5 கோடியைக் கூட கட்டாமல், இணைப்பு துண்டிக்கப்படும் நிலைக்குச் சென்றது பள்ளிக் கல்வித் துறை. கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது?

நாட்டின் நாளைய தூண்களான மாணவ சமுதாயத்தின் கல்விக்குக் கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா? அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாமல், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு?’ என்று அரசுக்கு கேள்விகள் பல எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகள் சங்கம் அறிக்கை:

இதனிடையே, இவ்விவகாரத்தை அரசியல் ஆக்கக்கூடாது என்று தனியார் பள்ளிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்(டிபிஎஸ்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசுப் பள்ளிகளை தத்தெடுப்பொம் என்று சொல்லப்படவில்லை’ என்றும் ‘அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் தனியார் பள்ளிகளின் பங்கு இருக்கும் என்றே சொல்லப்பட்டது; அரசுப் பள்ளிகளை மேம்படுத்த சிஎஸ்ஆர் மூலம் பங்களிப்பு இருக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், எந்தவொரு இடத்திலும் ‘அரசுப் பள்ளிகள் தத்தெடுக்கப்படும்’ என்ற வார்த்தை உபயொகப்படுத்தப்படவில்லை.

அரசுப் பள்ளிகளின் சீரமைப்பை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு பயன்பாடாக இருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது. அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி வளர்சிச்கு உதவும் திட்டம் இது. அப்படியிருக்கையில், சொல்லப்படாத வார்த்தையை அரசியலாக்குவது பெருந்தன்மையை கொச்சைப்படுத்தும் விதத்திலான செயல். உதவ தயாராக உள்ள தனியார் பள்ளி தாளாளர்களின் பெருந்தன்மை கொச்சைப்படுகிறது’ என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *