இந்தத் தலத்தில் பாலாம்பிகையும் தனிச்சந்நிதி கொண்டிருக்கிறாள். இந்தத் தலத்தில் திருமணக்கோலத்தில் இருந்த இறைவனைத் தரிசிக்க வந்த அம்பிகை, சுவாமியின் அழகில் லயித்தவராக இந்தத் தலத்திலேயே தங்கிவிட்டார்.
கிழக்கு நோக்கிய சந்நிதிகளில் ஐயன் வைத்தியநாதரும் அன்னை சுந்தராம்பிகையும் திருக்காட்சி தர, பாலாம்பிகை தெற்குப் பார்த்த சந்நிதியில் அருட்காட்சி தருகிறாள்.
மேலும் இந்தக் கோயிலில் காத்தியாயினி அம்மனும் மயில் வாகனத்தில் காட்சி தருவது குறிப்பிடத்தக்க விசேஷம்.
விசேஷமாக இந்தக் கோயிலில் விநாயகர் தெற்குப் பார்த்துக் காட்சி தருகிறார். மேலும் இந்தத் தலத்தில் நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு நந்தி தேவர்கள் திருக்காட்சி தருகிறார்கள்.

மூன்று குழிகளே நவகிரக சந்நிதி
இந்தக் கோயிலில் மூன்று குழிகளே நவகிரகங்களாக வழிபடப்படுகின்றன. ஒருமுறை நவகிரகங்களுக்கு ஆணவம் ஏற்பட்ட காரணத்தால் ஈசன் இந்தத் தலத்தில் இருந்த நவகிரகங்களை அகற்றினார் என்றும் அன்றுமுதல் அந்தத் தலத்தில் மூன்று குழிகளே நவகிரக சந்நிதியாக உள்ளன என்றும் சொல்கிறார்கள்.
சிபி சக்கரவர்த்தியின் நவகிரக தோஷமும் நீங்கிய தலம் இது என்கிறார்கள். சனிக்கிழமைகளில் இந்தக் குழிகளுக்கு முன்பாக எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதிகம்.
இங்குள்ள, ஒரே கல்லினால் ஆன சோமாஸ்கந்த மூர்த்தமும், ரிஷப வாகனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியும் சிற்பச் சிறப்பினை விளக்குவதாகத் திகழ்கின்றன. வேறொரு சிறப்பும் உண்டு இந்தக் கோயிலில்.
ஆம்! இந்தக் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் ஜுரஹரருக்கு புழுங்கலரிசி சாதமும் மிளகு ரசமும் நைவேத்தியம் செய்து வழிபட்டால், தீராத காய்ச்சலும் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இப்படிப்பட்ட புராணச் சிறப்பு பெற்ற தலத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். வாழ்க்கை மாறும். வளமும் நலமும் சேரும்.