ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம்: நாமக்கல்லில் தடுப்பு நடவடிக்கை தீவிரம் | Bird flu outbreak in Andhra Pradesh Preventive measures intensified in Namakkal

1351032.jpg
Spread the love

நாமக்கல்: ஆந்திர மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி மற்றும் கிருஷ்ணா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே ஆந்திர மாநில பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மாவட்டத்தில் பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதியில் சுமார் 1,000க்கும் அதிகமான முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன.

இங்கு 5 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றை பாதுகாக்க கோழிகளுக்கு கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கோழிப்பண்ணை வாசலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு வெளி ஆட்களும், வாகனங்களும் அதன் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

வெளியில் இருந்து வரும் வாகனங்களை கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர். நாமக்கல் பகுதியில் நிலவும் தட்பவெப்பநிலை மற்றும் பண்ணைகளில் பின்பற்றப்படும் பயோ செக்யூரிட்டி முறைகளால், பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகள் பரவ வாய்ப்பு இல்லை.

எனினும், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *