ஹிந்தியில் ’தங்கல்’, ‘பவால்’, ‘சிச்சோரே’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் நிதிஷ் திவாரி. இவர்தான் அடுத்ததாக ராமாயணத்தை திரைப்படமாக்க உள்ளார்.
நமிதா மல்ஹோத்ராவின் பிரைம் போகஸ் ஸ்டூடியோஸ் சார்பில் ராமாயணம் உருவாகிறது. ராமனாக அனிமல் புகழ் ரன்பீர் கபூர் நடிக்கிறார். பிரேமம் புகழ் சாய்பல்லவி சீதையாக நடிப்பதாக தகவல். கேஜிஎஃப் புகழ் யஷ் ராவணனாக யஷ் நடிப்பது குறித்து நேர்காணலில் உறுதிசெய்தார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் நமிதா மல்ஹோத்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளிவருமென அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டா பதிவில் நமிதா மல்ஹோத்ரா கூறியதாவது:
இந்தியாவின் அதிகமாக கொண்டாடப்பட்ட கதைக்கு உயிர்கொடுக்கும்படியான ஈடுஇணையற்ற எதிர்காலத்தை கணிக்கக்கூடிய கதைக்கூறலின் தழுவலாக உருவாகிறது.
பத்தாண்டுகளுக்கு முன்பு நான் இந்த புனிதமான தேடலில் இறங்கினேன். பல கோடி மக்களின் இதயங்களை 5,000 ஆண்டுகளாக ஆளும் இந்த காவியத்தை திரைக்கு கொண்டுவர முயற்சிக்கிறேன்.
எங்களது குழுவினர் நமது வரலாற்றின் உண்மையை, கலாசரத்தை, புனிதத்தை, மிகவும் உண்மையாக, அற்புதமான விஷுவலாக மாற்றும் ஒற்றைக் குறிக்கோளுக்காக அயராது உழைத்து வந்தார்கள். அதை இன்று உங்களிடம் பகிர்வது மகிழ்ச்சியளிக்கிறது.
தீபாவளி 2026இல் முதல் பாகமும் தீபாவளி 2027இல் இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளது. உலகம் முழுவதும் நம்முடைய கலாசரத்தை, வரலாற்றை காணச் செய்யும் கனவு நனவாக உங்களது ஆசிர்வாதம் தேவை எனக் கூறியுள்ளார்.
இந்தப் படத்துக்காக ஆஸ்கர் வென்ற பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் உடன் நமது ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
சீதையாக சாய் பல்லவி நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படக்குழு இது குறித்து விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது