இறந்த மீனவர் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | tamilnadu chief minister mk Stalin wrote letter to the Union Minister

1288757.jpg
Spread the love

சென்னை: இலங்கை கடற்படை படகு மோதியதில் இறந்த மீனவர் உடலை உடனடியாக தாயகம் கொண்டுவரவும், காயமடைந்தவர்களை தமிழகம் அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து இருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியது. இதில் படகு சேதமடைந்ததால், மலைச்சாமி (59) என்ற மீனவர் கடலில் மூழ்கி இறந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மலைச்சாமி குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கடந்த ஜூலை 31-ம் தேதி இந்திய மீன்பிடி படகின் மீது இலங்கை கடற்படை ரோந்துப்படகு மோதிய சம்பவத்தில் ஒரு மீனவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். மேலும், ஒரு மீனவரை காணவில்லை. இது போன்ற நிகழ்வுகளில் இந்திய மீனவர்கள் உயிரிழப்பது இதயத்தை நொறுக்குவதாகவும், ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் உள்ளது.

இச்சம்பவம் மீனவ சமூகத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதுடன், இரண்டு மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இலங்கை அதிகாரிகளின் வசம் இந்த இரண்டு மீனவர்கள் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளையும், போதிய மருத்துவ வசதிகளையும் வழங்க வேண்டும். அவர்களை மிக விரைவில் தமிழகம் அழைத்து வர உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.நமது பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி மேற்கொள்ளும் இதுபோன்ற அத்துமீறல்கள், மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம், தமிழ்நாட்டின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் உள்ளது. இதனை கடந்த காலங்களில் பலமுறை தங்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன். எனவே, இந்த விஷயத்திற்கு அதிகபட்ச முன்னுரிமை அளித்து, தூதரக நடவடிக்கையின் மூலம் உரிய தீர்வு காணப்படும் என நான் நம்புகிறேன்” என்ற அக்கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *