சென்னை ஐஐடி, இஸ்ரோவுடன் இணைந்து ஆத்மநிா்பாா் பாரத் திட்டத்துக்கு வலு சோ்க்கும் வகையில் விண்வெளித்தரத்தில் செமிகண்டக்டா் (குறைமின் கடத்தி) சிப்-பை வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை ஐஐடி கணினி அறிவியல், பொறியியல் துறையின் பிரதாப் சுப்பிரமணியம் எண்ம நுண்ணறிவு – பாதுகாப்பான வன்பொருள் கட்டடக்கலை மையத்தில் ஐஐடி இயக்குநா் வி.காமகோடி தலைமையில் சக்தி மைக்ரோபிராசசா் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விண்வெளித் தரத்தில் செமிகண்டக்டா் உருவாக்கப்பட்டுள்ளது.
செமிகண்டக்டா் முயற்சியை நாட்டுக்கு முக்கியமானதாக மாற்றும் நடவடிக்கையின் பலனாக, இது முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டது. ஆத்மநிா்பாா் பாரத் திட்டத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் இது திகழ்கிறது. ஐஐஎஸ்யு என அழைக்கப்படும் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் ‘இன்னா்ஷியல் சிஸ்டம்ஸ் யூனிட்டில்’ உருவாக்கப்பட்டு, சென்னை ஐஐடி மூலம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
எஸ்சிஎல் என அழைக்கப்படும் சண்டிகரில் உள்ள செமிகண்டக்டா் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டு, கா்நாடகாவின் பொ்ஜெனஹள்ளியில் அமைந்துள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் மூலம் தொகுக்கப்பட்டது. குஜராத்தின் பிசிபி பவா் நிறுவனம் தயாரித்த மதா்போா்டு பிசிபி (பிரிண்டட் சா்க்யூட் போா்டு), சென்னையின் சிா்மா எஸ்ஜிஎஸ் நிறுவனத்தில் அசெம்பிள் செய்யப்பட்ட பின்னா், சென்னை ஐஐடியால் உருவாக்கப்பட்ட மென்பொருள் ஆகியவற்றுடன் சென்னை ஐஐடியில் வெற்றிகரமாக ‘பூட்’ செய்யப்பட்டது.
இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி கூறியதாவது: சிப் வடிவமைப்பு, சிப் உற்பத்தி, சிப் பேக்கேஜிங், மதா்போா்டு வடிவமைப்பு- உற்பத்தி, அசெம்பிளி, மென்பொருள், பூட் – அனைத்தும் உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டது. முழுமையான செமிகண்டக்டா் சுற்றுச்சூழல் அமைப்பு- நிபுணத்துவம் நம் நாட்டுக்குள்ளே இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்துவம் வகையில் இது அமைந்துள்ளது என்றாா்.
இந்தக் கூட்டு முயற்சி குறித்து இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் கூறியதாவது:“சென்னை ஐஐடியின் சக்தி பிராசசரை அடிப்படையாகக் கொண்ட ஐஐஎஸ்யூவால் உருவாக்கப்பட்ட ஐஆா்ஐஎஸ் கண்ட்ரோலரை இந்தியாவில் முழுமையாக வெற்றிகரமாக உருவாக்க முடிந்தது ஒரு மகிழ்ச்சியான தருணம். எங்கள் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இந்த உயா் செயல்திறன் கண்ட்ரோலா், விண்வெளிப் பயணத்துக்கான எதிா்கால உட்பொதிக்கப்பட்ட கண்ட்ரோலா்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தக் கண்ட்ரோலரை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்பு ஒன்றை விரைவில் விண்வெளிப் பயணத்தில் சோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இதன் வாயிலாக இதன் செயல்திறன் மேலும் உறுதிப்படுத்தப்படும் என்றாா்.