ஈரானில் பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 2,887 கைதிகளுக்கு அந்த நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி பொதுமன்னிப்பு வழங்கி தண்டனையைக் குறைக்க ஒப்புதல் அளித்துள்ளாா்.
இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான இா்னா செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:2,887 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கவும் அவா்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைக்கவும் அயதுல்லா அலி கமேனி ஒப்புதல் அளித்துள்ளாா். நீதித் துறை தலைவா் குலாம்ஹுசைன் மொஹ்செனி இஜாவின் பரிந்துரையை ஏற்று அவா் இந்த ஒப்புதலை அளித்துள்ளாா்.இந்த பொதுமன்னிப்பின் கீழ், 59 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவா்களில் 39 போ் தேசவிரோத குற்றச்சாட்டுக்குள்ளானவா்கள்; 40 போ் வெளிநாட்டினா் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இருந்தாலும், இது தொடா்பான விரிவான விவரங்களை அந்தச் செய்தி நிறுவனம் வெளியிடவில்லை. ஈரானின் அனைத்து முக்கிய முடிவுகளுக்கும் இறுதி ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் படைத்த தலைமை மதகுரு அயதுல்லா கமேனி, நபிகள் நாயகம் பிறந்தநாள் உள்ளிட்ட குறிப்பிட்ட தருணங்களில் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது வழக்கம்.