ஈரோடு இடைத்தேர்தலில் வாக்களிக்க பயன்படும் ஆவணங்கள் என்ன? – தேர்தல் ஆணையம் பட்டியல் | Election Commission ordered that all voters should bring photo identity card in the Erode by-election

1346636.jpg
Spread the love

சென்னை: நடைபெறவிருக்கின்ற ஈரோடு இடைத் தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.

இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை விவரம்: நடைபெறவிருக்கின்ற, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத அத்தகைய வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனுமொன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

  • ஆதார் அட்டை
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை
  • வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடிய)
  • தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
  • ஓட்டுநர் உரிமம்
  • நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD)
  • தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வாங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை;
  • இந்திய கடவுச் சீட்டு
  • புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
  • மத்திய/ மாநில அரசு/ பொதுத் துறை நிறுவனங்களால்/ வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்
  • பாராளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை
  • இந்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்டும் தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை (UDID).

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையால் வாக்காளரின் அடையாளம் மெய்ப்பிக்கப்படுகின்றபோது, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையிலுள்ள அச்சுப்பிழைகள் / எழுத்துப் பிழைகள் முதலியவற்றை பொருட்படுத்த தேவையில்லை. ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம்.

ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்குரிய வாக்காளர் பட்டியல் இடம் பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது. அவருடைய பெயர் வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவர்.

வாக்காளர் தகவல் சீட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அச்சிடப்பட்டு வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட போதிலும், வாக்காளர் தகவல் சீட்டு அடையாள ஆவணமாக அனுமதிக்கப்படாது. வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு தனித்த அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக “இந்தச் சீட்டு அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக வாக்குச் சாவடியில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.” என்று தடித்த எழுத்துக்களில் வாக்காளர் தகவல் சீட்டில் அச்சிடப்பட்டிருக்கும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக அசல் இந்திய கடவுச் சீட்டினை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *