கோவை: அதிகார துஷ்பிரயோகத்திற்கான முதலும் கடைசி தேர்தலாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும் என நம்புவதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் ஞாயிறு இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்பது தேசிய தலைவர் நட்டா தமிழக பாஜகவின் கோரிக்கை ஆராய்ந்து பின் அனுமதி வழங்கியதால் எடுத்த முடிவு. எங்கும் புறக்கணிக்காத கட்சி ஏன் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது என்பதை மக்கள் கூர்ந்து கவனிப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பது இதுவே முதல் முறை. இந்த தேர்தலை நாங்கள் கண்காணிப்போம்.
தேர்தலில் போட்டியிட்டால் தான் தைரியம் என்பதில்லை. அதிகார துஷ்பிரயோகத்திற்கான முதலும் கடைசியுமான தேர்தலாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும் என நம்புகிறோம். 2026 தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. ஆளுநர் கடுமையான வர்த்தையை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஏன் தள்ளப்பட்டார் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். அவர் கூறியது சரியானது தான். இனியாவது திமுக தனது போக்கை மாற்றி கொள்ள வேண்டும்.
பெரியாருக்கும் நிகழ்காலத்திற்கும் தொடர்பு உள்ளதா என்றால் இல்லை என்பது தான் பதில். பெரியாரை பாஜக எப்போதோ கடந்து விட்டது. 2023 ஆகஸ்ட் 17-ம் தேதி வரை அவசியமான கனிமவளம் மாநில அரசு கையில் இருந்தது. நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு மாறியது. டங்ஸ்டன் சுரங்க ஏலம் விட்டால் கூட அதிலிருந்து பெறப்படும் தொகை ஒரு ரூபாய் கூட மத்திய அரசுக்கு கிடைக்காது. மாநில அரசுக்கு தான் கிடைக்கும். எனவே முதல்வர் உண்மை தவறி சட்டப்பேரவையில் பேசியுள்ளார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு உதவி வருகிறார்.
உதயநிதிக்கு அண்ணா பல்கலை. விவகாரம் கண்ணுக்கு தெரியாது. நீட் தொடர்பாக அவர் அளித்த வாக்குறுதியை மறந்துவிட்டார். தகுதியில்லாத நபர் அரசாங்கத்தில் உயர் பதவிக்கு வந்தால் எவ்வாறு அந்த அரசாங்கம் பாதிக்கப்படும் என்பதற்கு உதயநிதி சிறந்த சான்று” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.