‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் கட்சிப் பாகுபாடு இல்லை: பேரவையில் உதயநிதி விளக்கம் | no party discrimination in Ungal thoguthiyil muthalvar scheme – Udhayanidhi Stalin

1356538.jpg
Spread the love

சென்னை: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் கட்சி பாகுபாடு பாராமல் செயல்படுத்தப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்த பேசிய பிறகு ‘உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்’ தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியது: “எதிர்க்கட்சித் தலைவரும், உறுப்பினர்களும், ‘உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்’ குறித்துப் பேசினர். அது குறித்து, நான் எனது பதிலுரையில் ஏற்கெனவே நீண்ட விளக்கத்தை அளித்திருந்தேன். தற்போது மீண்டும் அது குறித்த சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்.

ஒவ்வொரு தொகுதியிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத, அவசியத் தேவைகளை அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் பரிந்துரைகளின் பேரில் நிறைவேற்றுவதற்காக, ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். இதுகுறித்து, 10 கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக 2,437 பணிகளுக்கான முன்மொழிவுகள் அரசுக்கு வரப்பெற்றன. அதையடுத்து, அவை துறைவாரியாக உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு, பரிசீலிக்கப்பட்டன.

இது தொடர்பாக, தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவால் செயல்படுத்தக் கூடிய பணிகள் தெரிவு செய்யப்பட்டன. அதன்படி, 2023 – 2024-ஆம் நிதியாண்டில் 784 பணிகள் கிட்டத்தட்ட ரூ.11,000 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் இதுவரை 367 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல், கடந்த 2024-2025-ஆம் நிதியாண்டில் 469 பணிகள் ரூ.3,503 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றில் இதுவரை 65 பணிகள் முடிவுற்ற நிலையில், மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆக மொத்தம் இந்தத் திட்டத்தின்கீழ், கடந்த 2 ஆண்டுகளில் 1,253 பணிகள், ரூ.14,466 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தை அறிவித்தபோது, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இன்றைய தினம் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதைப்போல, சில உறுப்பினர்கள் பரிந்துரைத்த பணிகளைச் செயல்படுத்த இயலாத நிலையில், அவற்றுக்கு பதிலாக மாற்றுப் பணிகள் கோரப்பட்டன. அவற்றிலும் சில பணிகள் செயல்படுத்த இயலாதவை எனத் தெரிய வந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் எடப்பாடி தொகுதியைப் பொறுத்தவரையில், அவர் சார்பில் மொத்தம் 10 கோரிக்கைகள் பெறப்பட்டன. அவற்றில் 4 பணிகள் செயல்படுத்துவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன; அதில் 3 பணிகள் நிறைவேற்றப்பட்டு, ஒரு பணி தற்போது நடைபெற்று வருகிறது. அவர் கொடுத்துள்ள கோரிக்கைகளில், மீதமுள்ள 6 பணிகளைப் பொறுத்தவரையில், ஒரு பணி துறையின் பரிசீலனையில் உள்ளது.

இதர 5 பணிகள் சாத்தியமில்லை என்று கண்டறியப்பட்டு, அவற்றுக்கு பதிலாக மாற்றுப் பணிகளைக் குறிப்பிட்டு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் மூலமாகக் கேட்கப்பட்டுள்ளது. இந்த மாற்றுப் பணிகளை பரிசீலனை செய்து நிறைவேற்றுவதற்கான உரிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தை முதல்வர் அறிவிக்கும்போது குறிப்பிட்டவாறு, எந்தவிதமான கட்சிப் பாகுபாடின்றி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *