நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் உருவான மெய்யழகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சென்னையிலிருக்கும் அருள்மொழி வர்மன் (அரவிந்த் சாமி) சொந்த ஊருக்குச் செல்ல வேண்டுமா என்கிற குழப்பத்தில் இருக்கிறார். உறவினர்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவம் கொடுத்த வலி 20 ஆண்டுகள் கடந்தும் தன் மனதிலிருந்து இன்னும் அகலாததை நினைத்து வெதும்புகிறார். குடும்பத்தினரின் அழுத்தத்தால் திருமணமாகவுள்ள நபர் தன்னுடைய முக்கியமான உறவு என்பதைப் புரிந்துகொண்டு அரை மனதாகத் தஞ்சாவூர் செல்கிறார்.
பழைய நினைவுகளை மீட்டபடி தஞ்சை வீதிகளில் அலைந்து திரிந்து திருமணம் நடக்கவுள்ள நீடாமங்கலம் ஊருக்குக் பேருந்தில் பயணமாகி திருமண மண்டபத்தை அடைந்ததும், திடீரென ‘அத்தான்’ என்கிற குரல் அருள்மொழிக்கு அறிமுகமாகிறது. அருள்மொழி எங்கு சென்றாலும் கூடவே வருகிறது ‘அத்தான்’ குரல். ஒருகட்டத்தில் அருள்மொழி சலிப்படைந்தாலும் இவ்வளவு அன்பாக, பாசமாக இருக்கிறானே… எதையும் மறக்காமல் நினைவுகளை மீட்டுத்தருகிறானே என கார்த்தியின் கதாபாத்திரத்தைக் கண்டு அருள்மொழி தவிக்கிறார். யார் இவன்? சின்ன வயதில் பார்த்திருக்கிறோமா? இவனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்விகளாலும் நினைவுகளாலும் உருவாகியிருக்கிறது மெய்யழகன்.
96 படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் என்ன ஆனார் எனப் பலரும் தேட ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து படம் இயக்குகிறார் என செய்தி வெளியானபோதே படத்திற்கான புரமோஷன் துவங்கியது. 96 போல இந்த முறையும் ஆர்ப்பாட்டமில்லாமல் அதேநேரம் பழைய நினைவுகளைத் தொட்டு அதில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திடும் கதையாக மெய்யழகனைக் கொண்டு வந்திருக்கிறார்.
தமிழும் நிலமும் உறவும் நினைவுமே படத்தின் மையம். முதல் காட்சியிலேயே பெரிய நந்தி சிலையைக் காட்டுகிறார்கள். சிவனுக்கு நந்திபோல் அருள்மொழி வர்மனுக்கு மெய்யழகனும், மெய்யழகனுக்கு அவனுடைய காளை என்றும் உறவுகளின் நீட்சியை அழகியல் தன்மையுடன் இயக்குநர் பிரேம் குமார் காட்சிப்படுத்தியிருக்கிறார். பிறந்து, பால்யத்தை எதிர்கொண்ட ஊரின் திசைகளை பல ஆண்டுகள் கழித்துத் தேடும் ஒருவனின் நினைவாக உறவுகளின் மேன்மையை அழகாகக் கையாண்டிருக்கிறார்.