ஊர் ஊராகச் சென்று மக்களைத் தாக்கும் ஒற்றை யானை! ஒரே நாளில் 4 பேர் பலி!

Dinamani2f2025 03 282fvaq6n6gc2f202503283362188.jpg
Spread the love

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதம் பிடித்த ஒற்றை யானை தாக்கியதில் 12 மணி நேரத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

கும்லா மற்றும் சிம்டேகா ஆகிய மாவட்டங்களில் தனது கூட்டத்தை விட்டு பிரிந்ததாகக் கருதப்படும் காட்டு யானை ஒன்று நேற்று (மார்ச் 27) இரவு முதல் இன்று (மார்ச் 28) காலை வரை அங்குள்ள கிராமவாசிகளைத் தாக்கியபடி சுற்றித் திரிந்துள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணியளவில் சிம்டேகாவின் புரூயிகி கிராமத்தில் புகுந்த அந்த ஒற்றை யானை அங்குள்ள வீட்டை இடித்து தாக்கியதில் விகாஸ் ஒஹ்தார் என்பவர் பலியானார். பின்னர், சில மணி நேரங்களில் அந்த யானை பபுதா கிராமத்தில் சிபியா லகுன் என்ற பெண்ணை விரட்டி கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காலை 6 மணியளவில் கும்லாவின் பால்கோட் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் புகுந்த அந்தக் காட்டு யானை அங்கு வயலில் வேலை செய்து கொண்டிருந்த கிறிஸ்டோபர் எக்கா (வயது 60) என்பவரையும் தெடாரொலி கிராமத்தில் ஹேமாவதி தேவி (35) என்பவரையும் தாக்கியதில் அவர்கள் பரிதாபமாக பலியானார்கள்.

இத்துடன், அந்த யானை தாக்கியதில் அஜய் மிஞ் மற்றும் இமில் பா ஆகியோரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மதம் பிடித்து ஊர் ஊராக சென்று மக்களைத் தாக்கி வரும் இந்தக் காட்டு யானை, அப்பகுதியில்தான் கடந்த சில நாள்களாக சுற்றி வந்ததாகவும் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கிராமவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், மக்களைக் கொல்லும் காட்டு யானையைப் பற்றிய தகவல் பரவியதால் சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. தொடர்ச்சியாக நடைபெற்ற உயிர் பலிகளினால் தற்போது வனத்துறையினர் அந்த யானையை கண்டுபிடித்து, அதனை காட்டுக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது.. இதைச் செய்யாவிடில் பணம் வேஸ்ட்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *