“எங்களை திட்டமிட்டு அவையில் இருந்து வெளியேற்றிவிட்டார் சபாநாயகர்” – இபிஎஸ் | AIADMK General Secretary Edappadi Palaniswami slams dmk govt

1356022.jpg
Spread the love

சென்னை: “மக்களுக்காக தான் சட்டமன்றம், சட்டமன்றத்துக்காக மக்கள் இல்லை என்பதை பேரவைத் தலைவரும், முதல்வரும் உணர வேண்டும். எங்களை திட்டமிட்டு அவையில் இருந்து வெளியேற்றிவிட்டார் சபாநாயகர்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முயற்சித்தார். ஆனால், முன்னதாகவே அனுமதி பெறாததால் தீர்மானத்தை கொண்டுவர பேரவைத் தலைவர் அப்பாவு அனுமதிக்கவில்லை. கவன ஈர்ப்பு விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால், பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவர்களை ஒருநாள் கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

பின்னர், இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது: பிரதான எதிர்க்கட்சியின் வேலை, நாட்டில் நடக்கும் மக்கள் பிரச்சினைகளை கூறுவதே. இதனை நாங்கள் செவ்வனே செய்து வருகிறோம். ஆனால் நாட்டு மக்களின் பிரச்சினையை கூறுவதற்கு இந்த அரசு அனுமதிப்பதில்லை. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது நேரமில்லா நேரத்தில் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்கள், நாங்கள் பதிலும் கூறியுள்ளோம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் முத்துக்குமாரை கஞ்சா வியாபாரிகள் கல்லை தலையில் போட்டு கொன்றுள்ளனர். திமுக ஆட்சியில் போதைப் பொருள்களை சுதந்திரமாக விற்கின்றனர். இந்த தகவலை தெரிவிப்பவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்படுகிறது. தற்போது காவலரையே கொலை செய்யும் அளவுக்கு போதைப் பொருள் வியாபாரிகள் துணிவுபெற்றுள்ளனர்.

கடந்த காலத்தில் காவல் துறை தலைவர் ஒருவர் கஞ்சாவை கட்டுப்படுத்துவதற்காக ,ஆப்ரேசன் கஞ்சா 2.O. 3.O , 4.O என கூறிகொண்டு, தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது வரை போதைப் பொருள் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

காவல்துறையினர் காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முயன்றோம். ஆனால், எங்களை அனுமதிக்கவில்லை. எங்களை திட்டமிட்டு அவையில் இருந்து வெளியேற்றிவிட்டார் சபாநாயகர். பயிற்சி மருத்துவரை கடத்த முயன்றதாக தகவல் தெரிவிக்கின்றன. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

அவர்கள் எங்களை பேச விடாமல் செய்வதையே, குறிக்கோளாக இருக்கின்றனர். பிரதான எதிர்க்கட்சி, ஆளும்கட்சி மீது எந்த குறையும் சொல்லக்கூடாது என இவர்கள் இப்படி செயல்படுகின்றனர். மக்களுக்காக தான் சட்டமன்றம், சட்டமன்றத்துக்காக மக்கள் இல்லை என்பதை பேரவைத் தலைவரும், முதல்வரும் உணர வேண்டும். மக்களை பற்றி கவலைப்படாமல் குடும்பத்தை பற்றியே நினைக்கிறது இந்த ஆட்சி; முதல்வரின் மகன் உதயநிதி பதிலுரை அளிப்பதற்கு யாரும் தடையாக இருக்கக்கூடாதென சர்வாதிகார போக்கில் நடந்துகொண்டனர். இது கண்டனத்துக்குறியது” எனத் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *