எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு: நாமக்கல் பள்ளி மாணவர் ரஜனீஷ் முதலிடம் | MBBS, BDS Rank List Released Namakkal School Student Rajneesh Topper

1298073.jpg
Spread the love

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் பள்ளி மாணவர் பி.ரஜனீஷ் முதல் இடம் பிடித்து உள்ளார்.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி, 22 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு கல்லூரிகளில் மொத்தம் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. அரசு கல்லூரிகளில் எஞ்சிய 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 6,630 எம்பிபிஎஸ் இடங்கள், 1,683 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 496 எம்பிபிஎஸ் இடங்கள், 126 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதுதவிர, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,719 எம்பிபிஎஸ் இடங்கள், 430 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஜூலை 31-ம் தேதி தொடங்கி கடந்த 9-ம் தேதியுடன் முடிவடைந்தது. மொத்தம் 43,063 பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை முடிவடைந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்வில், தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

சுகாதாரத் துறை செயலர் சுப்ரியா சாஹு, மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குநர் ஜெ.சங்குமணி, மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் அருணா, மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 28,819 பேர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு இடங்களுக்கு 3,683 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,417 பேருடன் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதல் இடம் பிடித்த பி.ரஜனீஷ், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். நாமக்கல் லில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற இவர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னையை சேர்ந்த மாணவர் எம்.சையத் ஆரிஃபின் யூசுப், மாணவி எஸ்.சைலஜா ஆகியோர் 715 மதிப்பெண்ணுடன் 2, 3-ம் இடங்களை பிடித்துள்ளனர். தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 7 மாணவர்கள், 3 மாணவிகள் இடம்பெற்றுள்ளனர்.

நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் 715 மதிப்பெண் பெற்ற சென்னை மாணவர் சையத் ஆரிஃபின் யூசுப் முதல் இடமும், 710 மதிப்பெண்ணுடன் கே.ருஷில், ஜே.ஜாசன் சந்திரஜ்சிங் ஆகியோர் 2, 3-ம் இடங்களையும் பிடித்துள்ளனர்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில், 669 மதிப்பெண்ணுடன் கிருஷ்ணகிரி மாணவி ரூபிகா முதல் இடம் பிடித்துள்ளார். சேலம் மாணவி காயத்ரிதேவி (668), திருவண்ணாமலை மாணவி அனுசுயா (665) ஆகியோர் 2, 3-ம் இடங்களை பிடித்துள்ளனர்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. 22-ம் தேதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மற்றும் மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு, விளையாட்டு வீரர் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு தனியார் கல்லூரிகளில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

துணை மருத்துவ தரவரிசை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய்க் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. இதற்கான தரவரிசை பட்டியலையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்று வினோதினி முதலிடம் பிடித் துள்ளார். 6 ஆண்டு கால பார்ம் டி (டாக்டர் ஆஃப் பார்மஸி) படிப்பில் திவ்யா என்ற மாணவி முழு கட்ஆப் மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகு, துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது.

தமிழக சுகாதாரத் துறையின் https://tnmedicalselection.net மற்றும் https://tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மேற்கண்ட அனைத்து தரவரிசை பட்டியல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *