மைசூரில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவன வளாகத்தில் சிறுத்தை உலவுவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் அமைந்துள்ள இன்ஃபோசிஸ் நிறுவன வளாகத்தில் சிறுத்தை உலவுவது கண்டறியப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2 மணியளவில் இன்ஃபோசிஸ் நிறுவன வளாகத்தில் சிறுத்தை உலவுவது சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் காலை 4 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுத்தை இந்த வளாகத்தில் நுழைவது இது முதல்முறை அல்ல என்றும் இதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்ததாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிறுவனம் மைசூரின் ஹெப்பல் தொழில்துறை பகுதியில் ரிசர்வ் வனப்பகுதிக்கு அருகிலேயே அமைந்துள்ளது. அங்கிருந்து உணவு தேடி அலைந்த சிறுத்தை வழிதவறி இங்கு நுழைந்திருக்கலாம் என்று கூறிய வனத்துறையினர் அதிரடிப் படை அமைத்து சிறுத்தையைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க | பிரதமரின் முதன்மைச் செயலாளர் உறவினர்கள் எனக்கூறி பணமோசடி செய்த தம்பதி கைது!
இதனைத் தொடர்ந்து, சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அதனைப் பிடிக்கும் வரை இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்கள் யாரும் அலுவலகத்திற்கு வரவேண்டம் என்றும், வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், நிறுவனம் இருக்கும் வளாகத்தினுள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.