“ஓய்வு பெற்றவர்களுக்கு ஒப்பந்தப் பணி அளிப்பது இளைஞர்களுக்கு பேரிடி!” – இபிஎஸ் சாடல் | Appointment of retired persons on contract basis in vacant government posts – EPS

1353919.jpg
Spread the love

சென்னை: “தமிழக அரசுத் துறைகளில், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களே ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தப்படுகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக தேர்வு நடத்தி அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் குறித்த காலத்தில் நிரப்பி, படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற தமிழக அரசை வலியுறுத்துகிறேன்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, வெற்றி பெற்று கடந்த 4 ஆண்டுகளாக நிர்வாகத் திறமையற்ற ஆட்சியை நடத்தி வருகிறார். 2021 திமுக தேர்தல் அறிக்கையில், அரசு துறைகளில் 5.50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், வாக்குறுதி எண்.187-ன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், தற்போதைய பொம்மை முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

ஆனால், உண்மையில் தமிழக அரசுத் துறைகளில், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களே ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தப்படுகின்றனர். குறிப்பாக, தலைமைச் செயலகத்திலேயே பணி ஓய்வு பெற்று ஓய்வூதியம் வாங்கிக்கொண்டிருக்கும் பிரிவு அலுவலர்கள், சார்பு, துணை, இணை மற்றும் கூடுதல் செயலாளர்கள் நிலையில் பலர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு, மாதம் 1 லட்சம் தொகுப்பு ஊதியத்தில், தற்காலிக ஆலோசகராக பணிபுரிவதற்கு, தலைமைச் செயலகத்தில் துணைச் செயலாளர் பதவி நிலைக்கு குறையாத பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் 21.3.2025-க்குள் விண்ணப்பிக்க நாளிதழ்களில் விளம்பரம் வந்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எப்போது லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும் என்று, தகுதி வாய்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் தவமிருக்கும் நிலையில், அவர்களின் தலையிலும், மற்றும் தற்போது பதவி உயர்வுக்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களின் தலையிலும், நிர்வாகத் திறனற்ற திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசின் இந்த விளம்பரம் பேரிடியாக விழுந்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக தேர்வு நடத்தி அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் குறித்த காலத்தில் நிரப்பி, படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற இந்த திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *