புதுக்கோட்டை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, விசாரணையை மேலும் காலதாமதப்படுத்தும், துரிதமான பலன் கிடைக்காது என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 68 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் புதன்கிழமை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில்,வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மேலும், தமிழக காவல்துறையும் சிபிசிஐடியும் சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில்,கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, விசாரணையை மேலும் காலதாமதப்படுத்தும், துரிதமான பலன் கிடைக்காது என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் சம்பவத்தில்,முதல்வர் உத்தரவின்பேரில் 3 அமைச்சர்கள் அங்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பணிகளைத் தீவிரப்படுத்தினோம். சிபிசிஐடி போலீஸார் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.