கவரைப்பேட்டை ரயில் விபத்து: ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு | Kawaripet train accident: Case registered under conspiracy to overturn train

1328474.jpg
Spread the love

சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக, ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவில் தமிழக ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம் தேதி இரவு 8.30 மணி அளவில் பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் பிரதான பாதைக்கு பதிலாக லூப் லைன் எனப்படும், கிளை பாதையில் மாறி, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில், எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டன. 19 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

விபத்து நடந்த இடத்தில், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி, மாதிரிகளை எடுத்துச் சென்றனர். இதற்கிடையில், தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி, விபத்து குறித்து ஆய்வு மற்றும் விசாரணை நடத்தினார். ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோரிடம் கடந்த வாரம் சென்னை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையில், தமிழக ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, ரயில் விபத்து தொடர்பாக ரயில் நிலைய அதிகாரி முனி பிரசாத் பாபு, கொருக்குப்பேட்படை போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், காயம் மற்றும் கடுமையான காயம் ஏற்படுத்தும் விதமாக செயல்படுதல், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், கவனக்குறைவான செயலால் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, 3 டி.எஸ்.பி-கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் 3 குழுக்களாக பிரிந்து, விசாரணை நடத்துகின்றனர். நிலையமேலாளர், பாய்ன்ட்மென், விபத்து நடைபெற்ற நேரத்தில் பணியில் இருந்த ஊழியர்கள், அதிகாரிகள், பொறியாளர்கள் என 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து, விசாரணை நடைபெறும் நிலையில், இந்த விபத்துக்கு சதிவேலை நடந்திருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக ரயில்வே போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக, ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவில் தமிழக ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து ரயில்வே போலீஸார் கூறியதாவது: விபத்து நடைபெற்ற இடத்தில் அதாவது பிரதான பாதையில் இருந்து கிளை பாதைக்கு (லூப் லைன்) மாற்றக்கூடிய பாய்ன்ட்டில் போல்ட்டுகள், நட்டுகள் கழற்றப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவில் மாற்றி உள்ளோம். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே சட்டத்தில் 150வது சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக இதுவரை 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *