காசி தமிழ் சங்கமம் 3-ம் கட்ட பயணம்: சென்னை – பனாரஸ் வாரணாசி இடையே முதல் சிறப்பு ரயில் சேவை தொடக்கம் | Today First special train service starts between Chennai – Banaras Varanasi

1350724.jpg
Spread the love

சென்னை: காசி தமிழ்ச் சங்கமத்தின் மூன்றாம் கட்ட பயணத்தில், சென்னை சென்ட்ரல் – பனாரஸ் வாரணாசி இடையே முதல் சிறப்பு ரயில் சேவையைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

கலாச்சார மையங்களாகத் திகழ்ந்த வாரணாசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் மூன்றாம் கட்ட நிகழ்வுகள், வரும் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த முறை சித்த மருத்துவம், பாரம்பரிய தமிழ் இலக்கியம், தேசத்தின் கலாச்சார ஒற்றுமை ஆகியவற்றுக்கு அகத்தியர் ஆற்றிய பங்களிப்பை எடுத்துக்காட்டும் விதமாகக் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், தமிழகத்திலிருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 1,080 பேர் பங்கேற்க உள்ளனர். இதற்கான, ஏற்பாடுகளைச் சென்னை ஐ.ஐ.டி. ஒருங்கிணைத்துச் செயல்படுத்துகிறது.

தமிழகத்திலிருந்து பிரத்யேகமாக 5 ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரண்டு ரயில்கள், கன்னியாகுமரியிலிருந்து இரண்டு ரயில்கள் மற்றும் கோவையிலிருந்து ஒரு ரயில் என இரு மார்க்கத்திலும் மொத்தம் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், காசி தமிழ்ச் சங்கமத்தின் மூன்றாம் கட்ட பயணத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 212 பக்தர்களுடன் பனாரஸ்-க்கு புறப்பட்ட முதல் சிறப்பு ரயிலைத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி மற்றும் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் சுதா சேஷய்யன், தெற்கு ரயில்வே கூடுதல் மேலாளர் கவுசல் கிஷோர், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *