சென்னை: காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்த முடியாத சூழலுக்கான காரணம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
நாடு முழுவதும் காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாள் இன்று (அக்.2) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் நினைவிடங்களில் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதற்காக வருகை தந்த விசிக தலைவர் திருமாவளவன் காந்தி மண்டபத்துக்குச் செல்லாமல் காமராஜர் நினைவிடத்தில் மட்டும் மரியாதை செலுத்திவிட்டு சென்றது சர்ச்சையானது.
இதுகுறித்து முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, “மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், காந்தியை தவிர்த்துவிட்டு, காமராஜர் நினைவிடத்தில் மட்டும் மரியாதை செலுத்தி உள்ளார். மது ஒழிப்பை வலியுறுத்த முடியவில்லையே என்ற குற்ற உணர்வு காரணமா என்பது தெரியவில்லை.” என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்து திருமாவளவன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: காலையில் 9.30 மணியளவில் காந்தி மண்டபம் சென்றோம். ஆளுநர் வந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின்னர்தான் மற்றவர்களுக்கு அனுமதி என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர். ஆளுநர் எப்போது வருவார் என்றபோது 10.30 மணிக்கு என்றனர். அதன் பிறகே காமராஜர் மணிமண்டபம் சென்று மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினோம். மாநாட்டையொட்டி உளுந்தூர்பேட்டைக்குச் செல்லவேண்டும் என்பதால் 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.