“காரில் பெண்களை துரத்திய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை தேவை” – அன்புமணி | Anbumani condemns DMK members who chased and harassed women on East Coast Road

1348833.jpg
Spread the love

சென்னை: கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திச் சென்று தொல்லை கொடுத்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இளம்பெண்கள் சிலர் பயணித்த காரை, திமுக கொடி கட்டப்பட்ட காரில் வந்த சிலர் வழிமறித்து, காரில் இருந்த பெண்களிடம் அத்துமீறும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை புறநகரின் மிக முக்கியமான சாலையில் பயணிக்கும் பெண்களை வழிமறித்து தொல்லை கொடுக்கும் அளவுக்கு சமூக விரோதிகளுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது அச்சமும் கவலையும் அளிக்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், குற்றம் செய்த சமூக விரோதிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

சென்னையின் மிக முக்கிய சாலையில் பயணிக்கும் பெண்களை காரைக் கொண்டு தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது? காரில் திமுக கொடி கட்டப்பட்டிருந்ததாலா? அல்லது தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக எத்தகைய குற்றங்கள் நடந்தாலும் அதை அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாது என்பதாலா? என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.

சென்னையில் அண்மைக்காலமாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது கண்டிக்கத்தக்கது. கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை வழிமறித்து அத்துமீறிய, திமுக கொடி கட்டப்பட்ட காரில் வந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *