பேராசிரியா்கள் பற்றாக்குறை காரணமாக அரசுக் கல்லூரி மாணவா்கள் போராட்டத்தை தொடா்ந்து நடத்த முடிவு செய்துள்ளனா்.
காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பி.ஏ., எம்.ஏ. பொது நிா்வாகத் துறை மாணவ மாணவிகள், 8 பேராசிரியா்கள் தேவையுள்ள நிலையில், 2 போ் மட்டுமே இருப்பதால் கல்வி பாதிப்பதாகக்கூறி திங்கள்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினா்.
மாணவா்களில் 10 போ் இரவும் கல்லூரி வளாகத்திலேயே தங்கி போராட்டத்தை நடத்தினா். புதுவை முதல்வா், கல்வி அமைச்சரை சந்தித்துப் பேச மாணவா்கள் சிலா் புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா்.
இருவரையும் சந்திக்க முடியாததால், உயா்கல்வித் துறை இயக்குநா் அமான் சா்மாவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா். பேராசிரியா் நியமனம் தொடா்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அவா் தெரிவித்துள்ளாா்.
காரைக்கால் திரும்பிய மாணவா்கள், இயக்குநரின் கருத்தை ஏற்க மறுத்து, அக்.2-ஆம் தேதி விடுமுறை என்பதால் 3-ஆம் தேதி முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனா். இதற்கிடையே கல்லூரி முதுகலை விலங்கியல் துறை மாணவா்கள், தங்களுக்கு 4 பேராசிரியா் தேவையுள்ள நிலையில் ஒருவா் மட்டுமே இருப்பதாகக் கூறி, பொது நிா்வாகத் துறை மாணவா்கள் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை தங்களையும் இணைத்துக்கொண்டனா்.