கார் பந்தயத்தில் நேரிட்ட விபத்தில் நடிகர் அஜித் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
நடிகர் அஜித் குமார் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தனது பெயரில் அஜித் குமார் ரேஸிங் என்ற பெயரில் ரேஸிங் கம்பெனியும் நடத்திவருகிறார். அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி படம் வெளியான நிலையில் தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளிவரவிருக்கிறது.
போர்த்துகல் நாட்டில் நடந்த ரேஸில் அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது. அதன்பின்னர் துபையில் நடந்த போட்டியில் பங்கேற்ற அஜித்தின் கார் மீண்டும் விபத்தில் சிக்கியது. இந்த நிலையில், மீண்டும் இப்போது கார் விபத்தில் சிக்கியிருக்கிறார் நடிகர் அஜித்.
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் ரேஸிங்கில் நடிகர் அஜித் ஓட்டிய கார் மீண்டும் விபத்துக்குள்ளானது. ரேஸிங்கில் ஈடுபட்டபோது மற்றொரு கார் குறுக்கே வந்து மோதியதில் அஜித் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.