காவிரி – குண்டாறு – வைகை இணைப்பு திட்டம் தாமதம் ஏன்? – நீர்வளத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Why Cauvery-Gundar-Vaigai interlinking project delayed? – HC orders WRD to respond

1356063.jpg
Spread the love

மதுரை: காவிரி – குண்டாறு – வைகை இணைப்பு திட்டம் ஏன் தாமதமாகிறது என்பது குறித்து தமிழக நீர்வளத் துறை தலைமைச் பொறியாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகேசன், முனியசாமி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டது. இத்திட்டத்தால் விவசாயிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பயனடைவர். இருப்பினும் இணைப்பு திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவில் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், ஆறுகள் இணைப்பு திட்டப் பணிகள் குறித்து ஒவ்வொரு 3 மாதத்துக்கு ஒரு முறை பொதுப் பணித்துறையின் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ.ஸ்ரீமதி அமர்வில் இன்று (மார்ச் 28) விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், “ஆறுகள் இணைப்புத் திட்டம் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், காவிரி – குண்டாறு – வைகை இணைப்பு திட்டம் ஏன் தாமதமாகிறது, திட்டத்தை விரைவுபடுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *