கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கான நிரந்தர தீர்வு என்றும், இடைக்கால தீர்வாக 99 ஆண்டுகள் கச்சத்தீவை குத்தகைக்கு பெறவேண்டும் எனவும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தர தீர்வு. ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்து கடைபிடிக்க வேண்டும். மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமை. மீனவர்களின் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தவெகவின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி தமிழக அரசை நகர வைத்துள்ளது.
1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், அன்றைய ஆளும்கட்சியான திமுகதான். 1999-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மத்திய அரசுகள் இயங்கியதே திமுகவின் தயவினால்தான். அத்தகைய நிலையில் அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் திமுக அரசை தவெக கடுமையாக கண்டிக்கிறது. இலங்கை கடற்படை தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் மத்திய அரசு, தமிழக மீனவர்களை மட்டும் கைவிடுவது ஏன்?
99 ஆண்டு குத்தகை: கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு. நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 ஆண்டு குத்தகையாக கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு எவ்வித சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும். இலங்கைத் தமிழர்களின் வாழ்வும், பாதுகாப்பும். அமைதியும். நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க, பொது வாக்கெடுப்பு மட்டுமே தீர்வு.
இலங்கை செல்லும் பிரதமர் மோடி, ‘கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்’ என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். பிரதமரின் இந்த இலங்கை பயணம் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் தவெகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் தலைமை அறிவித்திருந்தது.
அதன்படி, சென்னையில் தெற்கு, வடக்கு மாவட்டச் செயலாளர் அப்புனு தலைமையில் பாண்டி பஜாரிலும், கிழக்கு மாவட்டச் செயலாளர் பாலமுருகன் தலைமையில் அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் அருகிலும், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் குமார் தலைமையில் வில்லிவாக்கத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் ஈசிஆர் பி.சரவணன் தலைமையில் பனையூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.