குழந்தையின் மார்பகங்களைப் பிடிப்பது, பைஜாமா நாடாவை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றத்தின் கீழ் வராது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
11 வயது குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்ய இரு நபர்கள் முயற்சித்தது தொடர்பான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பவன், ஆகாஷ் ஆகிய இருவரும் 11 வயது குழந்தையின் மார்பகங்களைப் பிடித்து அங்கிருந்த வாய்க்காலின் கீழ்ப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவரது பைஜாமாவின் நாடாவை அவிழ்த்துள்ளனர்.
அதற்குள் அங்கு ஆட்கள் வந்தததைத் தொடர்ந்து குழந்தையை விட்டுவிட்டு இருவரும் தப்பித்து ஓடினர்.
இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயணன், “குற்றம் சாட்டப்பட்ட பவன் மற்றும் ஆகாஷ் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், அவர்கள் பாதிக்கப்பட்டவரின் மார்பகங்களைப் பிடித்து அவரது கீழ் ஆடையை இறக்க முயன்று அதன் நாடாவை இழுத்தனர். பின்னர் அந்தக் குழந்தையை கால்வாயின் கீழ் இழுத்துச் செல்ல முயன்றனர். ஆனால் ஆட்கள் வந்ததால் அவர்கள் பாதிக்கப்பட்டவரை விட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதையும் படிக்க | பிரான்ஸ் பெண் பாலியல் வன்கொடுமை: சுற்றுலா வழிகாட்டி கைது
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தனர் என்பதை நிரூபிக்க இந்த உண்மை மட்டுமே போதுமானதாக இல்லை. ஏனெனில், இந்த உண்மைகளைத் தவிர, பாலியல் வன்கொடுமை செய்ய வேறு எந்த செயலையும் அவர்கள் செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுகு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான எந்த முகாந்திரமும் இந்த வழக்கில் இல்லை என்று அவர்கள் வாதிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை மாற்றியுள்ளது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குறைந்த தண்டனை உள்ள பிரிவுகளான 354-பி ஐபிசி (பாதிக்கப்பட்டவரைத் தாக்குதல், ஆடையை அவிழ்த்தல்), மற்றும் போக்ஸோ பிரிவு 9/10 -ன் கீழ் வழக்குபதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில், முதன்மை குற்றச்சாட்டாக பாலியல் வன்கொடுமை முயற்சி இல்லை என்றும் அதற்கு பதிலாக, பெண்ணைத் தாக்குதல், நிர்வாணப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.