கோடை வெயில் எதிரொலி: 1 முதல் 5-ம் வகுப்புக்கான இறுதிப் பருவத்தேர்வு தேதிகள் மாற்றம்! | Final semester exam dates for grades 1 to 5 changed due to heatwave

1356279.jpg
Spread the love

சென்னை: கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வுகள் முன்கூட்டியே ஏப்ரல் 7 முதல் 17-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட்டது. பத்தாம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 28-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 9-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் கோடை வெயில் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது. இதனால் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு மட்டும் இறுதி பருவத் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க வேண்டுமென பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன. இதுதொடர்பாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். இதையடுத்து தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு தேதிகளை மாற்றி திருத்தப்பட்ட கால அட்டவணையை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டது.

அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-ம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 7 முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் பாடவாரியாக தேர்வு நடைபெறும் விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டவணையை பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களின்படி தேர்வுகளை நடத்தி முடிக்க அனைத்து விதமான பள்ளிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையை பொருத்தவரை 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 12-ம் தேதி முதலும், 4, 5-ம் வகுப்புக்கு ஏப்ரல் 18-ம் தேதி முதலும் தொடங்கும். எனினும், ஆசிரியர்கள் பள்ளி இறுதி வேலைநாள் வரை பணிக்கு வரவேண்டும் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *