கோயில்களின் வளர்ச்சிக்கு ரூ.8,37.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது: இந்து சமய அறநிலையத் துறை தகவல் | 837 crores has been allocated for the development of temples

1347588.jpg
Spread the love

தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. கோயில்களின் வளர்ச்சிக்கு திமுக அரசு ரூ.8,37.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

‘இந்து சமய அறநிலையத் துறையின் மோசமான நிர்வாகத்தால் தமிழகத்தில் கோயில்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,900 கோடி வரை இழப்பு – ஆலய வழிபடுவோர் சங்கம் குற்றச்சாட்டு’ என்ற தலைப்பில் நேற்று `இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளாக கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. திமுக அரசு பொறுப்பேற்று பின்னர் 38 மாவட்டங்களுக்கு 38 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு, கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை 8,511 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கோயில்களின் நிர்வாகமும் அறங்காவலர்களால்தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயில்களில் செயல் அலுவலர்கள் பூஜை மற்றும் மத ரீதியான சடங்குகள் எதிலும் தலையிடுவதில்லை.

மண்டல, மாநில வல்லுநர் குழுவின் ஒப்புதலோடு, மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, உரிய அனுமதி பெற்று, கோயில் நிதி, அரசு மானியம், ஆணையர் பொது நலநிதி, உபயதாரர் நிதி மூலமாக கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின்படியே ஒப்பந்தம் கோரப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் அங்கீகரிப்பட்டு வருகின்றன. அறநிலையத் துறையின் கீழ் 8,321 கோயில்கள் மட்டுமே, வருமானத்தின் அடிப்படையில் 5 முதல் 12 வரை சதவீதம் நிர்வாகச் செலவினங்களுக்காகவும், 1.5 முதல் 4 சதவீதம் வரை தணிக்கை செலவினங்களுக்காகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

நிதி வசதியில்லாத இதர கோயில்களுக்கு இத்தொகை நிர்ணயம் செய்யப்படுவதில்லை. தற்போது வரை 916 கோயில்களுக்குச் சொந்தமான, ரூ.7,127.25 கோடி மதிப்பிலான 7387.79 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோயில் சொத்துக்கள் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டப்பட வேண்டும் என்று தெரிவித்திருப்பது, எவ்வித ஆதாரமும் இல்லாத, உண்மைக்குப் புறம்பான தகவலாகும். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அறநிலையத்துறையின் அசையா சொத்துக்கள் மூலம் ரூ.945.68 கோடி வருவாய் ஈடுபட்டப்பட்டுள்ளது.

மேலும், 98 கற்சிலைகள், 230 உலோக சிலைகள், 11 மரச்சிலைகள், 4 மரகதலிங்கங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில்களின் உபரிநிதி முதலீடு கடந்த ஆட்சியைவிட 1.06 மடங்கு உயர்ந்துள்ளது. ரூ.5515.54 கோடி மதிப்பில், 12,202 கோயில்கல் 23,234 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் 3,493 கோயில்களில், ரூ.1,260.76 கோடி மதிப்பிலான பணிகள், உபயதாரர் நிதி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் 2,378 கோயில்கள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. மேலும், 1,000 ஆண்டுகளுக்கு பழமையான 274 கோயில்களை புனரமைக்க ரூ.300 கோடி நிதியை அரசு மானியமாக வழங்கியுள்ளது.

அதேபோல, திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் 21 கோயில்களுக்குச் சொந்தமான, ரூ.880 கோடி மதிப்பிலான 1,100 கிலோ தங்ககட்டிகள் தங்க முதலீட்டு திட்டத்தின் கீழ் வைப்பீடு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் ரூ.18 கோடி வட்டி வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயில்களின் வருவாய் அரசால் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. கோயில்களின் வளர்ச்சிக்காகவும், பராமரிப்புக்காகவும் அரசால் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை கோயில்களுக்கு ரூ.8,37.14 கோடி அரசு நிதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *