கோவில்பட்டியில் மர தடி விழுந்து தொழிலாளி பலி: இழப்பீடு கோரி உறவினர்கள் சாலை மறியல் | Worker dies after Tree stump falls in Kovilpatti 

1304304.jpg
Spread the love

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே குச்சி கம்பெனியில் மர தடி விழுந்து தொழிலாளி உயிரிழந்ததை தொடர்ந்து, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாசிலாமணி (55). இவர் தனியார் குச்சி கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று (சனிக்கிழமை) கம்பெனியில் மாசிலாமணி பணியில் இருந்தார். அப்போது குச்சி தயாரிப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரத் தடி ஒன்று திடீரென உருண்டு அவர் மீது விழுந்தது. இதில், மாசிலாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாசிலாமணிக்கு அழகுமுத்து என்கிற மனைவி, மாரிராஜ் என்கிற மகனும் உள்ளனர்.

மாசிலாமணிக்கு இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நடந்தது. இதனிடையே மாசிலாமணிக்கு சரிவர பேச முடியாது. சரியாக காது கேட்காது. அதனால் அவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் அதுகுறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மாசிலாமணி உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.

மேலும் தெற்கு திட்டங்குளம் ஊர் தலைவர் பெருமாள்சாமி, ஊராட்சி ஒன்றிய முன்னாள் உறுப்பினர் இந்திரன் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள், உறவினர்கள் கோவில்பட்டி – எட்டயபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கிராம மக்களின் மறியல் போராட்டத்தில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்து காவல் ஆய்வாளர்கள் ராஜாராம், பிரேமா மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம். அதனால் மறியலை கைவிட வேண்டும் என கூறினர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்ட கிராம மக்கள் சாலையோரம் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தனர்.

தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சரவண பெருமாள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், டி.எஸ்.பி.வெங்கடேஷ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ரூ.6.25 லட்சம் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாசிலாமணி உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவில்பட்டி அருகே குச்சி கம்பெனியில் மரத்தடி விழுந்து தொழிலாளி உயிரிழந்ததை தொடர்ந்து இழப்பீடு வழங்க வலியுறுத்தி தெற்கு திட்டங்குளத்தில் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *