சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: தமிழக சட்டப் பேரவையில் காரசார விவாதம் | Heated debate in the Assembly over the demand for a caste-based census

1355050.jpg
Spread the love

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது. இது குறித்து பாமக உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 17-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 4-ம் நாளான இன்று (மார்ச் 20) நடைபெற்ற விவாதத்தின்போது, பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசுகையில், “இந்த நாடு, சாதி, மதங்கள் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சாதி அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. அதனடிப்படையிலேயே வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்கிறோம். வன்னியர் சமூகத்துக்கு உரிய பங்கை பிரித்து கொடுக்க வேண்டும்.

ஆந்திரா போன்ற மாநிலங்களில் சாதிவாரியாக வாரியங்கள் அமைக்கப்படுகின்றன. அதன் மூலம் அந்த சாதியில் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது எளிதாகிறது. அதுபோல் தமிழகத்தில் அமைக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. இதில் ஏராளமான சாதிகள் உள்ளன. எந்த சாதிக்கு எவ்வளவு ஒதுக்கீடு கிடைத்துள்ளது என்பது தெரியவில்லை. அதனால், தொகுப்பு இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்த வேண்டும். அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும்” என்றார்.

அப்போது, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், “சென்சஸ் சட்டம் மத்திய அரசிடம் உள்ளது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். 4 ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு நடத்தவில்லை. கடந்த 2023-ம் ஆண்டு அக்.20-ம் தேதி, மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்றே, இந்த தீர்மானத்தின் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். கூட்டணியில் அங்கம் வகிக்கும் நீங்களும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்” என்று பதில் அளித்தார்.

அப்போது பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், “மத்திய அரசை குறை கூறுவது தவறு. தமிழகத்தில் ஒரு சாதி பி.சி-யாக இருந்தால், அது புதுச்சேரியில் எம்.பி.சி-யாக உள்ளது. ஒரே சாதி மாநிலத்துக்கு மாநிலம் முரண்பட்டு உள்ளது. அதனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்” என்றாா்.

தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், “மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசும், நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன்படி இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அதுபோல தமிழகத்திலும் மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தவறு என உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. உரிய கணக்கெடுப்பு நடத்தி, அதன்படி ஒதுக்கீடு செய்யதான் அறிவுறுத்தியுள்ளது. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும்” என்றாா்.

அதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி சென்செஸ் எடுக்கவில்லை. சர்வே தான் எடுத்துள்ளனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது” என்று கூறினார்.

அப்போது ஜி.கே.மணி, “கல்விக் கொள்கை தொடர்பாக நீதிபதி முருகேசன் கமிட்டி அறிக்கையை வெளியிட வேண்டும்” என்றார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், “அந்த கமிட்டி பரிந்துரையை வழங்கியுள்ளது. அது பரிசீலனையில் உள்ளது” என்றார்.

தொடர்ந்து ஜி.கே.மணி, “அரசின் இரு மொழி கொள்கையை பாமக வரவேற்கிறது. மும்மொழிக் கொள்கை தேவையற்றது. தமிழ் பயிற்று மொழி என்பதை சட்டமாக்க வேண்டும். பின்தங்கிய தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் அமைக்க வேண்டும்” என்றார். அதற்கு அமைச்சர் எ.வ.வேலு, “திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் கொண்டு வந்தால் எதிர்க்கிறீர்கள். தருமபுரி மாவட்டத்துக்கு சிப்காட் வேண்டும் என்கிறீர்களே?” என்றார்.

அப்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “தருமபுரியில் சிப்காட் கொண்டுவரப்பட்டு, 3 நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்ட திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

அதைத் தொடர்ந்து வேல்முருகன், “தெலங்கானாவில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தேசிய, பன்னாட்டு கல்விக்கொள்கை கொண்ட பள்ளிகள் அனைத்திலும் தெலுங்கு கட்டாயம் கற்பிக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது” என்று கூறினார்.

அதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை எந்த பள்ளியில் படித்தாலும் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள தமிழாசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.

பின்னர் விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ், “ஏற்கெனவே 50 சதவீதத்துக்கு மிகாமல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்ட நிலையில், பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. அப்போதே அது 50 சதவீத இட ஒதுக்கீட்டை தாண்டிவிட்டது.

அதனால் தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வராது. இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக கொண்டுவந்த சட்டங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தான் சிக்கல் இருக்கிறது” என்று கூறினார். இவ்வாறாக பேரவையில் விவாதம் நடந்தது. | வாசிக்க > சட்டப் பேரவையில் வேல்முருகன் ‘சம்பவம்’ – முதல்வர் வேதனையும், அப்பாவு எச்சரிக்கையும்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *