சிலரை மகிழ்விக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது: அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டிப்பு | Misuse of power to please a few is unacceptable: High Court

1357654.jpg
Spread the love

மதுரை: அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை நேர்மையான, உண்மையான, உரிய காரணங்களுக்காக யன்படுத்தப்பட வேண்டும். அந்த அதிகாரத்தை யரையோ மகிழ்விப்பதற்காக பயன்படுத்தினால் ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிபவர் நீலநாராயணன். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதை ரத்து செய்யக் கோரி நீலநாராயணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது, சில ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதில் தவறு இருப்பதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அதன் பின்னர் நடந்த விசாரணையில் மனுதாரர் கூறியது உறுதி செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மோசடியில் தொடர்புடைய ஆசிரியர்கள் மனுதாரருக்கு பல்வேறு பிரச்சினைகள் கொடுத்து வந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட புதிய தலைமை கல்வி அலுவலர் பொறுப்பேற்றதும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்தப்புகாரை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் விசாரிக்காமல் மனுதாரரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையில் எந்த விபரங்களும் இல்லை எனக் கூறப்பட்டிருந்தது. அரசு தரப்பில், “மனுதாரருக்கு எதிராக குற்றம் சுமத்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நிர்வாகத்தை சுமூகமாக்கும் நோக்கில் மனுதாரர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், யாரை திருப்திப்படுத்த பள்ளிக்கல்வி துறையின் இணை இயக்குனர் அவசரமாக பணியிட மாற்ற உத்தரவை பிறப்பித்தார் என்பதையும், அதற்கான அவசரத் தேவை என்ன? என்பதையும் நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆசிரியர்களோடு இணக்கமான உறவை கொள்ளவில்லை என்பதற்காக பணியிட மாற்றம் செய்யும் உத்தரவு மிகவும் விசித்திரமாக உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்களுடன் மனுதாரரால் இணக்கமான உறவை பேண இயலவில்லை எனில் திருப்பத்தூர் மாவட்ட ஆசிரியர்களுடன் மட்டும் அது எப்படி சாத்தியமாகும்? உரிய காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டால், அதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அதிகாரத்தை நேர்மையாக, உண்மையான, உரிய காரணத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும். அதிகாரத்தை யரையோ மகிழ்விப்பதற்காக பயன்படுத்தினால் அது ஏற்கத்தக்கது அல்ல.

எந்த ஊழியரையும் நீதியின்றி காயப்படுத்தக் கூடாது. அது அவரை மட்டும் அல்லாமல் அவரது குடும்பத்தினரையும் காயப்படுத்தும். ஊழல், தவறான நோக்கத்தில் செயல்படும் ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் வழங்க எந்த தயக்கமும் தேவையில்லை. சில ஊழியர்களை துன்புறுத்தும் நோக்கில் பணியிட மாறுதல் அதிகாரம் பயன்படுத்தப்படக் கூடாது. இந்த வழக்கில் மனுதாரரை இடமாற்றம் செய்த உத்தரவு நீதியற்றது.

ஊழியர்கள் அல்லது சங்கங்களால் அளிக்கப்படும் புகார்கள் அல்லது அவர்களால் நடத்தப்படும் போராட்டங்களின் முழு விவரத்தையும் விரிவாக ஆராயாமல் இடமாறுதல் வழங்கியதாக கூறப்படும் காரணங்களை ஏற்க இயலாது. இதுபோன்ற நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டால், எந்த அரசு ஊழியரும் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்ற முடியாது. எனவே, பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர் மனுதாரரை பணியிட மாற்றம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *