சிலை கடத்தல் வழக்கை திரும்ப பெற உள்துறைக்கு பொன். மாணிக்கவேல் இ-மெயில் அனுப்பியதாக உயர் நீதிமன்றத்தில் தகவல் | Pon Manikkavel sent email to Home Ministry to withdraw idol smuggling case

1358334.jpg
Spread the love

மதுரை: சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சுபாஷ்கபூர் மீதான வழக்குகளை திரும்ப பெறலாம் என உள்துறை அமைச்சகத்துக்கு பொன். மாணிக்கவேல் மின்னஞ்சல் அனுப்பினார் என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொன் மாணிக்கவேல். இவர் மீது பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தீனதயாளனை தப்பிக்க வைக்க உதவியதாக அதே பிரிவில் டிஎஸ்பியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காதர்பாட்சா குற்றம்சாட்டினார். இது தொடர்பாக பொன்.மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் காதர்பாட்சா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து, காதர்பாட்சா புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது.

முதல் கட்ட விசாரணை அறிக்கை நகல் கேட்டு பொன் மாணிக்கவேல் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். இதற்கு எதிராக காதர்பாட்சா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.

பொன் மாணிக்கவேல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல் வெளியாவதற்கு முன்பு அவசரம் அவசரமாக உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றதாக நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎஸ்பி காதர்பாட்சா தரப்பில், பொன் மாணிக்கவேல் வழக்கில் மதுரை அமர்வு விதித்த இடைக்கால தடை உத்தரவின் ஆன்லைன் நகல் மற்றும் இதற்கு முன்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ஆதாரமாகக் கொண்டே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிலை கடத்தலில் தொடர்புடைய சுபாஷ்கபூர் மீதான வழக்குகளை திரும்ப பெறலாம் என உள்துறை அமைச்சகத்திற்கு பொன் மாணிக்கவேல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

மேலும் பழவூர் சிலை கடத்தலின் போது காதர் பாட்ஷா சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றவில்லை. இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இந்த தகவல்களை முந்தைய விசாரணையின் போதே தெரிவித்து இருக்கலாம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் விசாரணை ஜூன் கடைசி வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *