“செந்தில் பாலாஜியை தியாகி என ஸ்டாலின் சொல்வது வெட்கக்கேடானது” – எடப்பாடி பழனிசாமி | cm Stalin calling Senthil Balaji a martyr is shameful eps

1318293.jpg
Spread the love

சேலம்: ஊழல் குற்றச்சாட்டில் கைதான செந்தில் பாலாஜியை தியாகி என முதல்வர் சொல்வது வெட்கக்கேடானது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புறநகர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் செம்மலை, மாவட்ட செயலாளர் இளங்கோவன், எம்எல்ஏக்கள், ஒன்றியம், நகர, பேரூர் மற்றும் சார்பு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் செயல் வீரர்கள் கூட்டம், உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்திற்கு பின்னர், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சியில் நிறைவேற்றபட்ட வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டேன். ஆனால் 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் தினமும் கொலை நடந்து வருகிறது. 20 நாளில் 6 பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதை கண்டித்து அதிமுக அரசு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகும் கூட திமுக ஆட்சி விழித்து கொள்ளாததால் தமிழகத்தில் மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது கண்டத்துக்குரியது.

காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட்டால்தான் குற்றங்கள் முற்றிலும் குறையும். தமிழகத்தில் போதைப்பொருள் சிக்குவதாக செய்திகள் வெளியாகுவது கவலை அளிக்கிறது. அரசு துரிதமாக செயல்பட்டு போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்கவிட்டால், இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்து விடும். உயர்நீதிமன்றம் எச்சரித்தும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசு தவறிவிட்டது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்து வெளியே வந்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜியை வருக, வருக என வரவேற்று, உன் தியாகம் பெரிது என கூறி செய்தி வெளியிட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் கைதான செந்தில் பாலாஜியை தியாகி என முதல்வர் சொல்வது வெட்கக்கேடானது. செந்தில் பாலாஜியை அமைச்சராக்கினால் மக்கள் பார்த்து கொள்வார்கள். தேர்தல் நேரத்தில் மக்கள் தக்க பதில் அளிப்பார்கள். திமுகவை வளர்க்க போராடியவர்களுக்கு தியாகி பட்டம் இல்லை. பல கட்சிகளுக்கு சென்று வந்தவருக்கு தான் தியாகி பட்டம். பொறுப்பில் இருக்கும் போது செந்தில்பாலாஜி உயர்மட்டத்தில் இருந்தவர்களை பெரிதாக கவனித்துள்ளதாக மக்கள் பேசுகிறார்கள்.

வீட்டு வரி, குடிநீர் வரி என வரி மேல் வரி போட்டு மக்கள் மீது தலை மீது சுமத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நகராட்சி, மாநகராட்சி பகுதியில் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு என்பது கண்டிக்கத்தக்கது. சொத்து வரி உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனையில் டீன்கள் நியமிக்கப்படாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்கேடு நிலவுகிறது. அதிமுக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது.

ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை சுட்டு பிடித்த காவல்துறையை பாராட்டுகிறேன். திமுகவின் 40 மாத கால ஆட்சியில் இருக்கிற தவறுகளை மறைக்கவே பவள விழா கொண்டாட படுவதாக கருதுகிறேன். ஒரேயொரு செங்கலை காட்டி மத்திய அரசிடம் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி கேட்கும் திமுக அரசு தமிழகத்தில் பல லட்சம் செங்கலால் கட்டப்பட்டுள்ள கால்நடை ஆராய்ச்சி பூங்காவை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கி வைத்துள்ளனர்.

செந்தில் பாலாஜி நிபந்தனையை மீறினால் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? எடுக்காது. முதல்வர் தியாகி என கூறும் போது, அமைச்சர் பொறுப்பு வந்த பிறகு, எப்படி நிபந்தனை கடைப்பிடிப்பார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, செந்தில் பாலாஜி குறித்து பேசிய வீடியோவை காண்பித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, செய்தில் பாலாஜியை தியாகி என கூறுகிறார். மூத்த அமைச்சர்கள் இருக்கிற நிலையில், ஜூனியர் அமைச்சராக, வேறு கட்சியில் இருந்து வந்தவருக்கு இவ்வளவு சலுகை கொடுப்பது, வாழ்த்துக்கள் சொல்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *