சென்னையில் குப்பை எரி உலை திட்டத்தை கைவிட்டு உரமாக்கும் மையங்களை செயல்படுத்த வானதி சீனிவாசன் வலியுறுத்தல் | vanathi srinivasan insists for to implement composting centers

1353265.jpg
Spread the love

சென்னை: சென்னையில் குப்பைகளை எரிக்கும் எரி உலை திட்டத்தைக் கைவிட்டு, குப்பையை உரமாக்கும் மையங்களை நவீன தொழில்நுட்பங்களுடன் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் குப்பை மேலாண்மை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. மாநகரின் பல்வேறு இடங்களில் குப்பை குவிந்து கிடப்பதும், அதிலிருந்து துர்நாற்றம் வீசி, மக்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகின்றன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதிக்குள் செயல்பட்டு வரும் மக்கும் குப்பையை உரமாக்கும் 168 மையங்களை மூட முடிவு செய்திருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

அதேபோல் மக்காத கழிவுகளிலிருந்து மறுசுழற்சி செய்ய வாய்ப்புள்ள பொருட்களை பிரித்தெடுக்கும் 88 பொருள் மீட்பு வசதி மையங்களை மூடவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இவற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால், அதை மூடும் முடிவை எடுத்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கழிவு மேலாண்மை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சியின் இதுபோன்ற நடவடிக்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்கி விடும்.

இதற்கிடையே குப்பைகளை மூடிய அமைப்புக்குள் உயர் வெப்ப நிலையில் எரித்து சாம்பலாக்கும் எரி உலைகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. இதனால் வெளிவரும் புகை சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும்.

எனவே, குப்பையை எரிக்கும் எரி உலை திட்டத்தை கைவிட்டு, குப்பையை உரமாக்கும் மையங்களில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி துர்நாற்றம் வீசுவதை தடுத்து, அவற்றை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *