“செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவர் நியமனம் பொருத்தமற்றது” – வேல்முருகன் சாடல் | appointment of Vice-Chairman of CICT is inappropriate – Velmurugan

1312943.jpg
Spread the love

சென்னை: “மேடையில் தமிழ் பேசுகிறார் என்பதற்காக, ஒரு மருத்துவத் துறையைச் சேர்ந்தவரை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமனம் செய்திருப்பது பொருத்தமற்றது. செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக மருத்துவர் சுதா சேஷய்யன் நியமனத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். தமிழக அரசின் ஒப்புதலோடு, தகுதியான ஒருவரை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்க வேண்டும்,”என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெரும்பாக்கத்தில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. தொல்பழங்காலம் முதல் கி.பி. 6-ம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதிக்குள் தோன்றிய இலக்கிய, இலக்கணம் குறித்த ஆய்வை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், தமிழ் மொழி ஆய்விலும், அதன் மேம்பாட்டிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.இந்த நிறுவனம் செம்மொழித் தமிழின் தொன்மை, தனித் தன்மை, அவற்றின் மரபுத் தொடர்ச்சி ஆகியவற்றை ஆராய்ந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக மருத்துவர் சுதா சேஷய்யனை நியமித்து, அதற்கான உத்தரவை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த செப்.12-ம் தேதியன்று பிறப்பித்துள்ளது.சுதா சேஷய்யன் அடிப்படையில் ஒரு மருத்துவர். கடந்த 2018-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவை தவிர, சுதா சேஷய்யன், பட்டிமன்ற பேச்சாளர். ஆன்மிக சொற்பொழிவு என்ற பெயரால் சனாதன கருத்துகளை பரப்புகின்ற சனாதனவாதி.மேடையில் அவர் நன்றாக தமிழ் பேசுகிறார் என்பதற்காக, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக சுதா சேஷய்யனை நியமித்திருப்பது கண்டனத்துக்குரியது.

மத்திய அரசின் இத்தகைய உத்தரவு என்பது தமிழறிஞர்களை அவமதிக்கும் செயல். தமிழ் ஆய்வாளர்களை இழிப்படுத்தும் நடவடிக்கை.சுதா சேஷய்யன் தமிழறிஞர் கிடையாது. தமிழ் ஆய்வாளர் கிடையாது. மேடையில் தமிழ் பேசுகிறார் என்பதற்காக, ஒரு மருத்துவத்துறையைச் சேர்ந்தவரை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமனம் செய்திருப்பது பொருத்தமற்றது. மத்திய அரசின் காசி சங்கமத்தை ஒருங்கிணைத்து நடத்தியதற்காக, சுதா சேஷய்யனுக்கு, மத்திய அரசால் வழங்கப்படுகிற பரிசா?

சுதா சேஷய்யன் நன்றாக தமிழ் பேசுவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், தமிழர்களின் தொல்காப்பியம், சங்க இலக்கியம் குறித்து அவர் அறிந்திருக்க முடியாது. அதற்கான அறிவுத் திறனும் அவருக்கில்லை. எனவே, செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக மருத்துவர் சுதா சேஷய்யன் நியமனத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். தமிழக அரசின் ஒப்புதலோடு, தகுதியான ஒருவரை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்க வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *