சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் விடுவிப்புக்கு எதிரான மறுஆய்வு மனு: தீர்ப்பை தள்ளி வைத்தது ஐகோர்ட் | Orders reserved in Review petition against Durai Murugan acquittal in disproportionate assets case

1346034.jpg
Spread the love

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 3.92 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்குப் பதியப்பட்டது.இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள், அவரது சகோதரர் மீது பதியப்பட்ட வழக்கில் இருந்து அவர்கள் அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கடந்த 2013-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு தொடர்பான எஃப்ஐஆர் மற்றும் குற்றப்பத்திரிகையை விளக்கி வாதிட்டார்.

அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, பி.வில்சன் ஆகியோர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களின் சொத்துக்களையும், அமைச்சர் துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியிருப்பது தவறானது. இந்த வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக வாங்கப்பட்ட சொத்துக்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனின் குடும்பத்தினரை, அவருடை பினாமி என குறிப்பிட எந்த ஆதாரமும் இல்லை, என்றனர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தனித்தனியாக, வருமான வரிக் கணக்குகளை தனித்தனியாக முறையாக தாக்கல் செய்துள்ளனர். அவற்றை லஞ்ச ஒழிப்புத் துறையும் ஏற்றுக் கொண்டுள்ளது. எஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டிய இந்த வழக்கை, அதிகார வரம்பு இல்லாத ஆய்வாளர் ஒருவர் புலன் விசாரணை செய்துள்ளார். அமைச்சருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய சட்டப்படி எந்த அனுமதியும் பெறவில்லை.

இதை எல்லாம் கருத்தில் கொண்டே விசாரணை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்துள்ளது. எனவே அந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மறுஆய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், எனவும் வாதிட்டனர்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறையின் மறுஆய்வு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *