காங்கிரஸ் தோற்று, 1967-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அண்ணாவும் கருணாநிதியும் முதல்வர்களாக இருந்த காலங்களில் இந்தத் தமிழ்ச் சமுதாயத்தில் பயனுறத் தக்க எண்ணற்ற மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, சில விட்டுக்கொடுப்புகள், சில சமரசங்கள் இருந்தபோதிலும் தமிழ்நாட்டின் நலன்களை முன்னெடுப்பதில் யாரும் குறை வைக்கவில்லை – இவ்வாறாகத்தான் இன்றைய திராவிட மாடல் – தமிழ்நாடு மாடல் உருவானது (திராவிடமா, தமிழா என்பது தனிப் பஞ்சாயத்து, அதை இங்கே கூட்டிக் குழப்பிக் கொள்ள வேண்டாம்).
ஜெயலலிதாவின் மரணப் படுக்கையில் இருந்தபோதுதான் தொடங்கியது எனலாம், தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரானவை என்று நன்றாகத் தெரிந்தபோதிலும் மத்திய அரசின் நெருக்குதலுக்குப் பயந்து சமரசமாகச் செல்வதும் விட்டுக்கொடுப்பதும். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஒப்புக்கொண்டிருக்கவே மாட்டார் என்ற எத்தனையோ விஷயங்களை அதிமுக அரசின் முதல்வர்கள் ஒப்புக்கொண்டனர்; விட்டுக்கொடுத்தனர்.
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த மக்கள், சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் அத்தனை தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்தனர்.
ஆனால், இத்தனை பெரிய அதிகாரத்தை மக்கள் தந்திருந்தபோதும் இன்றைக்கு வெளியே தெரிந்தும் தெரியாமலும் எத்தனையெத்தனை சமரசங்கள்?
வாக்குறுதியாகக் கொடுத்த நீட் தேர்வு பிரச்சினையே இன்னமும் தீர்ந்த பாடில்லை. எத்தனையோ பள்ளிகள், எத்தனையோ கல்லூரிகள், எத்தனையோ பல்கலைக்கழகங்கள் நாம் உருவாக்கியவை என்று குறிப்பிட்டிருக்கிறார் ஸ்டாலின். ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டிலுள்ள இந்தப் பல்கலைக்கழகங்கள் எல்லாம் யாருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன? இவற்றுக்கும் தமிழக அரசுக்கும் என்ன வகையான அதிகாரம், சம்பந்தம் இருக்கிறது?