ஜாகிர் உசேன் கொலையில் அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்க: எஸ்டிபிஐ | Police negligence in maintaining law and order is unacceptable – SDPI condemns

1355039.jpg
Spread the love

சென்னை: “சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையின் அலட்சியம் ஏற்புடையதல்ல. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. ஜாகிர் உசேன் பிஜிலி கொலை சம்பவம் கண்டிக்கத்தக்கது,” என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த படுகொலை சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. படுகொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் பிஜிலி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் பணியாற்றியவர். அவர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் முர்த்தின் ஜஹான் தைக்காவுக்கு சொந்தமான 32 செண்ட் வக்பு இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த சட்டரீதியாக போராடியதே காரணம் என கூறப்படுகிறது.

வக்பு சொத்தை சட்டரீதியாக மீட்கும் முயற்சியில் உள்ள தனக்கு எதிராக ஒரு குழு கொலை திட்டம் மேற்கொண்டு வருவதாக அவர் கடந்த ஜனவரி மாத தொடக்கத்திலேயே சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் அவர் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அந்த வீடியோவில் யார் யாரெல்லாம் அந்த சொத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்கள், யாரால் தனக்கு அச்சுறுத்தல் என்கிற விவரத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவருக்கு உரிய பாதுகாப்பை காவல் துறை வழங்காத நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையின் அலட்சியம் ஏற்புடையதல்ல. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இந்த அலட்சியப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தினருக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேற்படி வழக்கில் பின்னணியில் தொடர்புடைய திமுக பிரமுகர்கள் உட்பட அதிகாரிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளையும் மேற்படி வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட வேண்டும். குற்றங்கள் அதிகரிக்கக் கூடிய நகரமாக திருநெல்வேலி மாநகரம் இருந்து வருகிறது. அதை தடுக்கும் வண்ணம் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, நெல்லையில் கொலை செய்யப்பட்ட பிஜிலி ஜாகீர் உசேன் குடும்பத்தினரை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் உடன் மாவட்ட துணைத் தலைவர் சாகுல் அமீது உஸ்மானி,பொதுச் செயலாளர்கள் ஆரிப் பாஷா, அன்வர்ஷா, மாவட்டச் செயலாளர் பேட்டை முஸ்தபா,நெல்லை தொகுதி தலைவர் ஷேக் இஸ்மாயில், பொருளாளர் முபாரக் அலி,பாளைதொகுதி இணைச்செயலாளர் ஒ எம் எஸ் மீரான், தொகுதி கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *