காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘டாக்டர் மன்மோகன் சிங் குறித்து பேசுவது மிகுந்த உணர்சிப்பூர்வமானதொரு தருணம்’ எனக் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, ‘டாக்டர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையும் அவரது உழைப்பும், 1991 முதல் 2014 வரையிலான காலகட்டமும் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய காலம்.
அவருடன் நெருக்கமாக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். இவ்வளவு எளிமையானதொரு மனிதரை இதுவரை கண்டதில்லை. வரலாற்று சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவர், அவற்றுக்காக எப்போதும் உரிமை கோரியதில்லை.
அவர் நிதியமைச்சரான பின், இந்தியாவின் களம் முற்றிலுமாக மாறியது. நிதியமைச்சராகவும் பிரதமராகவும் அவர் உருவாக்கிய கொள்கைகளால் இப்போதைய நடுத்தர வர்க்கம் என்ற வாழ்வாதாரப் பிரிவு உருவானது.
தனது பதவிக்காலம் முழுவதும் ஏழைகளுக்காக எப்போதும் சேவையற்றியவர். கோடிக்கணக்கான இந்தியர்கள் ஏழைகளே என்ற உண்மையை அவர் மறைத்து பேசியதேயில்லை. அரசின் கொள்கைகள் ஏழைகளுக்குச் சாதகமாகவே இருக்க வேண்டும் என்று நமக்கு நினைவூட்டியவர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், மதிய உணவு திட்டம் விரிவாக்கம், பிடிஎஸ் ஆகியவற்றை இதற்கான உதாரணங்களாக குறிப்பிடலாம்.
அன்னாரது சாதனைகள் இன்னும் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை. அரசியலில் அவர் உடல்நலத்துடன் திறம்பட ஈடுபட்டிருந்த அந்த 23 ஆண்டுகளை பின்னோக்கி திரும்பிப் பார்க்கும்போது அவரது உண்மையான பங்களிப்பை நாம் உணர்ந்துகொள்ள இயலும்’ என உருக்கமாகப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.