டெல்லி சென்றடைந்தார் முதல்வர்: இன்று காலை பிரதமர் மோடியை சந்திக்கிறார் | cm stalin reached delhi

1317238.jpg
Spread the love

சென்னை: சென்னையில் இருந்து நேற்று மாலை புறப்பட்டு இரவு டெல்லிசென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழக திட்டங்களுக்கு தரவேண்டிய நிதி தொடர்பாக வலியுறுத்துகிறார்.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த செப்.14-ம் தேதி சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில், அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘கல்வி மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்துவேன்’’ என தெரிவித்தார்.

இதையடுத்து, கடந்த செப்.24-ம் தேதி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், செப்.26, 27 தேதிகளில் பிரதமரை சந்திக்க டெல்லி செல்வதாக குறிப்பிட்டிருந்தார். அதன்படி, நேற்று மாலை 5.10 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் முதல்வர்மு.க.ஸ்டாலினை, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் வழியனுப்பினர். அவருடன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் செல்கின்றனர். நேற்று இரவு 8.30 மணிக்கு டெல்லி சென்றடைந்த முதல்வரை, டி.ஆர்.பாலு எம்.பி., டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து, இரவு டெல்லியில் தங்கிய முதல்வர் ஸ்டாலின், இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அப்போது, தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்கும் படியும், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை விடுவிக்க வேண்டியும் மனு அளிக்கிறார். இதுதவிர, மதுரை,கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல், ஜிஎஸ்டி இழப்பீடு, பல்வேறு நதிகள்இணைப்பு திட்டத்துக்கான நிதி மற்றும் ஒப்புதல், மேகேதாட்டு, முல்லைப் பெரியாறு விவகாரங்கள், தமிழகத்துக்கான ரயில் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் மனு அளிக்க உள்ளார். இதுதவிர, ஆளுநரின் செயல்பாடுகள், ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்கும் மசோதாக்கள் குறித்தும் அவர் வலியுறுத்துகிறார்.

சந்திப்பு முடிந்த பிறகு, சமீபத்தில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கிறார். அதன் பிறகு, மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு சென்னை வருகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *