சென்னை: சிறுதொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் முதலீட்டு மானிய உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேவையில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் குறு சிறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 10 சதவீத கூடுதல் முதலீட்டு மானிய உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். பழங்குடியினர் நிறைந்த பகுதிகளில் கடன் உத்தரவாதத்துடன் ரூ.100 கோடி அளவில் பழங்குடியினருக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 120 இளைஞர்களுக்கு ரூ.1.2 கோடி மதிப்பீட்டில் உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். கவரிங் நகை தொழிலில் புகழ்பெற்ற சிதம்பரம் பகுதியில் கவரிங் நகை உற்பத்தியாளர்களுக்காக லால்புரம் கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.1.24 கோடி மதிப்பில் சிட்கோ சிறப்பு தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் பரணத்தில் ரூ.2.84 கோடி மதிப்பீட்டில் நவீன முந்திரி பதப்படுத்தும் குழுமம் நிறுவப்படும். திருச்சி மாவட்டம் முசிறியில் ரூ.3 கோடி செலவில் கோரைப்பாய் குழுமம் அமைக்கப்படும். ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சீனாபுரத்தில் ரூ.7.77 கோடியில் நெசவு குழுமம் ஏற்படுத்தப்படும். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மகளிர் தொழில் முனைவோருக்காக ரூ.7.97 கோடி செலவில் சிறுதானிய குழுமம் அமைக்கப்படும். சென்னை பெரம்பூரில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் வெள்ளி கலைப்பொருட்கள் குழுமம் நிறுவப்படும்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் வட்டம் கல்லிப்பாளையம் கிராமத்தில் ரூ.31.75 கோடி செலவில் ஆப்செட் பிரிண்டிங் மற்றும் புக் பைண்டிங் குழுமத்துக்கான பொது வசதி மையம் அமைக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் ரூ.37.25 கோடி மதிப்பீட்டில் தொழிலாளர் தங்கும் விடுதி கட்டப்படும்.
மேலும் 2 ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் 6 லட்சம் மாணவர்களுக்கு புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் ரூ.1.9 கோடி மதிப்பீட்டில் ‘நிமிர்ந்து நில்’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும்.
100 கிராமங்களில் 100 புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கும் வகையில் ‘கிராமம்தோறும் புத்தொழில்’ திட்டம் ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்படும். விண்வெளி தொழில்நுட்பம், கடல்சார் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இயங்கும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடியில் புதிய வட்டார புத்தொழில் மையம் அமைக்கப்படும். இவை உட்பட 43 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.