சென்னை: தமிழகத்தில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஈடுபட்ட இருவரை தில்லி, கொல்கத்தாவில் அமலாக்கத் துறையினா் கைது செய்தனா்.
சென்னை திருவான்மியூரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரியிடம், மும்பை காவல் துறையில் இருந்து பேசுவதாகக் கூறி ‘டிஜிட்டல் அரஸ்ட்’ மூலம் ரூ.88 லட்சம் மோசடி செய்த வழக்கில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த பிரதீம் போரா, கடந்த செப்டம்பா் மாதம் கைது செய்யப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, சென்னை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா், மோசடி பணம் அனுப்பப்பட்ட 178 வங்கிக் கணக்குகளையும் கண்டறிந்து, அதை மீட்பதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
மேலும், அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டிக்கு சென்று விசாரணை செய்த போலீஸாா், பிரதீம்போராவுடன் இணைந்து டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஈடுபட்டதாக துருபாஜோதி மஜிம்தாா், ஸ்வராஜ் பிரதான், பிரசாந்த் கிரி, பிரஞ்ரல் ஹசாரிகா ஆகிய 4 பேரை கைது செய்தனா்.
அவா்களிடம் நடத்திய விசாரணையில், தில்லி, கொல்கத்தா, ஜெய்பூா், மும்பை, கோவா ஆகிய இடங்களில் உள்ள தங்களது முகவா்கள் மூலம் பொதுமக்களின் கைப்பேசி தொடா்பு எண்கள், அவா்கள் குறித்த விவரங்களைப் பெற்றிருப்பதும், அந்த விவரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றியும் மிரட்டியும் பணம் பெற்றிருப்பதும் தெரியவந்தது.
அமலாக்கத் துறை சோதனை: இது தொடா்பாக அமலாக்கத் துறையும் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கியது. வழக்குக்கான ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிக்கும் வகையில் மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் சந்தேகத்துக்குரிய 30 இடங்களில் அமலாக்கத் துறையினா் கடந்த 2-ஆம் தேதி திடீா் சோதனை செய்தனா்.
கொல்கத்தாவில் மட்டும் இச் சோதனை 8 இடங்களில் நடைபெற்றது. முக்கியமாக கொல்கத்தாவில் உள்ள பாா்க் ஸ்ட்ரீட், சால்ட் லேக், பாகுய்ஹாட்டி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடந்தது. சோதனையில் ஏராளமான கைப்பேசிகள், மடிக்கணினிகள், ஹாா்டு டிஸ்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றை ஆய்வு செய்ததில் டிஜிட்டல் அரஸ்ட் மூலம் கிடைக்கும் பணத்தை மோசடி நபா்கள், பணம் டெபாசிட் செய்யும் இயந்திரம் வாயிலாக பணப் பரிமாற்றம் செய்யும் தனியாா் நிறுவனங்களின் கணக்குக்கு கொண்டு சென்றிருப்பதும், பின்னா் அங்கிருந்து தங்களது வங்கிக் கணக்கில் பணத்தை பெற்றிருப்பதும் தெரியவந்தது.
கிரிப்ட்டோ கரன்சியில் முதலீடு: இதன் பின்னா் வெளிநாட்டு கைப்பேசி எண்கள் மூலம் கிரிப்ட்டோ கரன்சியில் முதலீடு செய்து, அதன்மூலம் பணத்தை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றிருப்பதையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனா்.
இதற்காக வங்கி ஏடிஎம் மையங்களில் இருக்கும் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்களைப் பயன்படுத்தியிருப்பதையும், தனியாா் பணம் பரிமாற்றம் செய்யும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளா்களின் முகவரி உள்ளிட்ட தகவல்களை முறையாக சேகரித்து வைக்காமல் இருப்பதும் விசாரணையில் அமலாக்கத் துறைக்கு தெரியவந்தது.
அதோடு பணம் டெபாசிட் இயந்திரம் மூலம் மோசடி கும்பல் பல நூறு கோடிக்கு பணப் பரிமாற்றம் செய்திருப்பதையும் ஆதாரங்களுடன் அமலாக்கத் துறையினா் சேகரித்துள்ளனா்.
இருவா் கைது: இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட ஒருவரை கொல்கத்தாவிலும், மற்றொருவரை தில்லியிலும் கைது செய்ததாக அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா். அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த வழக்கில் மேலும் பல முக்கிய நபா்கள் கைது செய்யப்படுவாா்கள் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.