தமிழகத்தில் 2024-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை 27% அதிகம்: பாலச்சந்திரன் தகவல் | Northeast monsoon in Tamil Nadu 27% more than last year – Balachandran

1345277.jpg
Spread the love

சென்னை: “தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், அக்டோபர் மாதத்தில் 214 மி.மீ, நவம்பர் மாதத்தில் 140 மி.மீ, டிசம்பர் மாதத்தில் 235 மி.மீ. ஆக மொத்தம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 589.9 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று (டிச.31) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில் அக்டோபர் மாதத்தில் 214 மி.மீ, நவம்பர் மாதத்தில் 140 மி.மீ, டிசம்பர் மாதத்தில் 235 மி.மீ. ஆக மொத்தம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 589.9 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. அக்டோபர் மாதத்தில் இயல்பை விட 25 சதவீதம் அதிகமாகவும், நவம்பர் மாதத்தில் இயல்பை விட 23 சதவீதம் குறைவாகவும், டிசம்பர் மாதத்தில் 164 சதவீதம் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பருவமழை காலக்கட்டத்தில் 33 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. கடந்தாண்டு இயல்பை விட 4 சதவீதம் அதிகமாக பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு கடந்தாண்டைவிட 27 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது.குறிப்பாக, ஃபெஞ்சல் புயலால் அதிகமாக மழை கிடைத்திருந்தாலும், டிச.11-ம் தேதி முதல் டிச.14 வரையிலான காலக்கட்டத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக பரவலாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், அதி கனமழையும், மிக கனமழையும் பெய்துள்ளது.

மாவட்ட அளவில் பார்க்கும்போது, தென்மேற்கு பருவமழை காலக்கட்டத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும், கிட்டத்தட்ட 265 சதவீதம் இயல்பை விட மிக அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது. 16 மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 6 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்குப் பருவமழை காலத்தில், திருநெல்வேலி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும், 23 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 11 மாவட்டங்களில் இயல்பான அளவிலும் மழை பதிவாகியுள்ளது.

ஒரு வருடத்துக்கான சராசரியைப் பொறுத்தவரையில், 2024-ம் ஆண்டில் தமிழகத்தின் எந்தவொரு மாவட்டத்திலும் இயல்பைவிட குறைவான அளவு மழை பதிவாகவில்லை. திருநெல்வேயில் இயல்பை விட மிக அதிகமாக மழை பதிவாகியுள்ளது. 27 மாவட்டங்களில் அதிகமாகவும், 12 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பின்னர் வடகிழக்குப் பருவமழை விலகும்,” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *